ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தினை பிடித்து வெளியேறியிருந்தது. ஆனாலும் அந்த அணியின் நிர்வாகம் தற்போது நடைபெற்று முடிந்த ஏலத்திற்கு முன்னதாக அணியின் கேப்டனாக ஹார்டிக் பாண்டியாவை தக்க வைத்தது. இருப்பினும் அவரை விட கூடுதல் தொகை பும்ராவிற்கு அளிக்கப்பட்டிருந்தது.
நிச்சயம் மும்பை அணி அவரை தவறவிடும் :
மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்களாக ரோகித் சர்மா, திலக் வர்மா, சூரியகுமார் யாதவ் ஆகியோரை உறுதி செய்திருந்தது. அதே வேளையில் கடந்த பல ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரராக இருந்து வந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷன் அந்த அணியின் நிர்வாகம் மூலமாக கழட்டி விடப்பட்டிருந்தார்.
மேலும் இந்த மெகா ஏலத்தில் இஷான் கிஷன் பெரிய தொகைக்கு சென்றதால் அவரை மும்பை இந்தியன்ஸ் அணியால் ஏலம் எடுக்க முடியாமல் போனது. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் இஷான் கிஷனை தவற விடும் என்று அந்த அணியின் கேப்டனான ஹார்டிக் பாண்டியா வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :
எங்களுடைய ஓய்வறையில் ஒரு புத்துணர்ச்சி அளிக்கும் வீரராக இஷான் கிஷன் இருந்து வந்தார். நாங்கள் அவரை தக்கவைக்காத போதே ஏலத்தில் மீண்டும் வாங்க முடியாது என்பதை தெளிவாக அவரிடம் தெரிவித்திருந்தோம். அவருடைய குணம் மிகவும் இயல்பான ஒன்று. ஓய்வறையில் அனைவரையும் தனது நகைச்சுவையான பேச்சுகளின் மூலம் மிகவும் லேசாக வைத்திருந்த அவர் எங்களது அணியில் ஒரு ஆற்றல் மிக்க வீரராகவும் இருந்து வந்தார்.
அவரிடம் இருந்து கிடைத்த அன்பும், அரவணைப்பும் இயல்பான ஒன்று. இனிமேல் அவரைப் போன்ற ஒரு வீரர் மும்பை இந்தியன்ஸ் அணியில் கிடைப்பது கடினம். மற்றவர்கள் மீது கேக் அடிப்பது, வீரர்களிடம் குறும்பு செய்வது என அனைத்துமே இனி எங்களது அணியில் குறைந்து விடும். எங்களது அணிக்குள் அன்பை கொண்டு வந்தவர் இஷான் கிஷன்.
இதையும் படிங்க : சி.எஸ்.கே அணி என்னை வாங்கமுடியாமல் போக காரணம் இதுதான்.. அதை புரிஞ்சிக்குறேன் – தீபக் சாகர் நெகிழ்ச்சி
எப்போதுமே நாங்கள் உற்சாகமாக இருக்க அவர் ஒரு காரணமாக இருந்த வேளையில் நிச்சயம் அவரை நாங்கள் இனி தவற விடுவோம் என ஹார்டிக் பாண்டியா பேசியிருந்தார். இந்திய அணியிலும் நட்சத்திர வீரராக இடம் பிடித்து வந்த இஷான் கிஷன் பிசிசிஐ-யின் பேச்சை மீறியதால் அண்மையில் இந்திய அணியில் இருந்து கழட்டி விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.