இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் இந்தியா முதல் போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை சுவைத்து 2023 புத்தாண்டை வெற்றியுடன் துவக்கிய நிலையில் 2வது போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. புனே கிரிக்கெட் மைதானத்தில் ஜனவரி 5ஆம் தேதியன்று நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய பவுலர்களை அடித்து நொறுக்கி 206/6 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக 80 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த குசால் மெண்டிஸ் 52 ரன்களும் நிஷாங்கா 33 ரன்களும் எடுத்தனர்.
அவர்களுடன் மிடில் ஆர்டரில் அசலங்கா 4 சிக்ஸருடன் 37 (19) ரன்கள் எடுக்க கடைசியில் தசுன் சனாகா 2 பவுண்டரி 6 தெறிக்க விட்டு 56* (22) ரன்கள் குவித்து பினிஷிங் கொடுத்தார். சுமாராக பந்து வீசிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக உம்ரான் மாலிக் 3 விக்கெட்களை எடுத்தார். அதைத்தொடர்ந்து 207 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு இஷான் கிசான் 2, சுப்மன் கில் 5, ராகுல் திரிபாதி 5, கேப்டன் பாண்டியா 12, தீபக் ஹூடா 9 என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே இலங்கையின் பந்து வீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.
அசட்டு தைரியம்:
அதனால் 57/5 என சரிந்த இந்தியாவின் தோல்வி உறுதியான நிலையில் 6வது விக்கெட்டுக்கு அதிரடியான 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றிக்கு போராடிய சூரியகுமார் யாதவ் 3 பவுண்டரி 3 சிக்சருடன் 51 (36) ரன்கள் எடுத்து முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார். அவருடன் ஜோடி சேர்ந்து அவரை விட அதிரடி காட்டிய அக்சர் பட்டேல் 3 பவுண்டரி 6 சிக்ஸருடன் 65 (31) ரன்கள் குவித்து போராடி கடைசி ஓவரில் அவுட்டானார். இறுதியில் போராடிய சிவம் மாவியும் 26 (15) ரன்களில் அவுட்டானதால் 20 ஓவர்களில் 190/8 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா பரிதாபமாக தோற்றது.
அதனால் 1 – 1* (3) என சமனடைந்துள்ள இத்தொடரின் கடைசி போட்டியில் வென்றால் மட்டுமே சொந்த மண்ணில் கோப்பையை வெல்ல முடியும் என்ற நிலைமைக்கு இந்தியா தளப்பட்டுள்ளது. முன்னதாக இப்போட்டி நடைபெற்ற புனே கிரிக்கெட் மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த அணிகளே அதிக டி20 போட்டிகளை வென்றுள்ளன. குறிப்பாக கடைசியாக இங்கு நடைபெற்ற 13 ஐபிஎல் போட்டிகளில் 10 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகளே வென்றுள்ளன.
அதை டாஸ் போட்டு முடித்ததுமே களத்தில் இருந்த முன்னாள் வீரர் முரளி கார்த்திக் சுட்டி காட்டியது பின்வருமாறு. “வரலாற்றில் நடைபெற்ற போட்டிகள் மற்றும் புள்ளி விவரங்களின்படி இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்வதே சிறந்த முடிவாகும்” என்று கூறினார். அதற்கு கூலாக ஹர்டிக் பாண்டியா பதிலளித்தது பின்வருமாறு. “ஓ. அது எனக்கு தெரியாது. எனவே பரவாயில்லை” என்று கூறினார். இது இரவு நேர போட்டியாக நடைபெறுவதால் வரலாற்றை கணக்கில் கொள்ளாமல் பனியின் தாக்கத்தை மட்டுமே கணக்கில் கொண்ட கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது இந்தியாவுக்கு தோல்வியை கொடுத்தது.
தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்கள் சில நேரங்களில் ஹர்திக் பாண்டியா இப்படி அதீத தைரியத்துடன் அதிகப்படியான தன்னம்பிக்கையுடன் செயல்படுவதாக அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக மும்பையில் நடைபெற்ற முதல் போட்டியிலும் கடைசி ஓவரில் 13 ரன்களை கட்டுப்படுத்த வேண்டிய நேரத்தில் எஞ்சிய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முழுமையான 4 ஓவர்கள் முடிந்தும் அவருக்கு ஒரு ஓவர் எஞ்சியிருந்தது.
இதையும் படிங்க: தம்பி நீ 5 நோபால் போட்டதுக்கு காரணமே இதுதான். இப்போவாது புரிஞ்சிக்கோ – தினேஷ் கார்த்திக் கருத்து
அப்போது பொறுப்புடன் சென்று பந்து வீசாத அவர் ஸ்பின்னரான அக்சர் படேலை பந்து வீச வைத்தார். இறுதியில் வேண்டுமென்றே இது போன்ற கடினமான சூழ்நிலைகளை சந்திப்பதற்காக அக்சர் படேலை பந்து வீச வைத்ததாக விளக்கத்தையும் பாண்டியா கொடுத்தார். இங்கு அவர் தன்னம்பிக்கையுடன் தைரியமான முடிவை எடுக்க வேண்டாம் என்று ரசிகர்கள் சொல்லவில்லை. ஆனால் முதலில் தொடரை கைப்பற்றிய பின் 3வது போட்டியில் அந்த சோதனைகளை செய்து பார்க்கலாமே என்று ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள். ஏனெனில் இந்த முடிவால் இலங்கையிடம் தொடரை இழந்தால் அது சொந்த மண்ணில் மிகப்பெரிய அவமானமாக அமையும் என்று ரசிகர்கள் வினவுகின்றனர்.



