IND vs ENG : முக்கிய நேரத்தில் மீண்டும் கைகோர்த்த நட்சத்திர ஜோடி, சவாலான இலக்கை நிர்ணயித்த இந்தியா – என்ன நடக்க போகிறதோ?

Hardik Pandya IND vs ENg
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் 2007க்குப்பின் 15 வருடங்கள் கழித்து 2வது கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா சூப்பர் 12 சுற்றில் 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்து குரூப் 2 புள்ளி பட்டியல் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அந்த நிலையில் நவம்பர் 10ஆம் தேதியன்று நடைபெற்ற 2வது அரையிறுதி போட்டியில் குரூப் 1 புள்ளி பட்டியலில் 2வது இடத்தை பிடித்த வலுவான இங்கிலாந்தை இந்தியா எதிர்கொண்டது. புகழ்பெற்ற அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே தொடக்க வீரர் கேஎல் ராகுல் 5 (5) ரன்களில் அவுட்டாகி மீண்டும் ஏமாற்றிய நிலையில் அடுத்து களமிறங்கி விராட் கோலியுடன் கைகோர்த்த கேப்டன் ரோஹித் சர்மா 2வது விக்கெட்டுக்கு 47 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் மெதுவாக விளையாடி 4 பவுண்டரியுடன் 27 (28) ரன்களில் அவுட்டானார். அப்போது களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் வழக்கம் போல 1 பவுண்டரி 1 சிக்ஸருடன் அதிரடியாக 14 (10) ரன்கள் குவித்தாலும் திடீரென ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

- Advertisement -

என்ன நடக்குமோ:
அதனால் 75/3 என தடுமாறிய இந்தியாவுக்கு அடுத்ததாக களமிறங்கிய பாண்டியாவுடன் ஜோடி சேர்ந்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி நங்கூரமாகவும் அதிரடியாகவும் ரன்களை சேர்த்தார். 4வது விக்கெட்டுக்கு முக்கியமான 66 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை மீட்டெடுத்த இந்த ஜோடியில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் அரைசதம் அடித்த விராட் கோலி முக்கிய நேரத்தில் 50 (40) ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த சமயத்தில் களமிறங்கிய ரிஷப் பண்ட் 6 (4) ரன்களில் ரன் அவுட்டானாலும் மறுபுறம் நங்கூரமாக நின்ற ஹர்திக் பாண்டியா கடைசி நேரத்தில் சரவெடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி 4 பவுண்டரி 5 மெகா சிக்சர்களையும் பறக்க விட்டு கடைசி பந்தில் ஹிட் விக்கெட் முறையில் தன்னைத்தானே 63 (33) ரன்களில் அவுட்டாக்கிக் கொண்டார்.

அவரது அதிரடியால் தப்பிய இந்தியா 20 ஓவர்களில் 168/6 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் ஜோர்டான் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் இதே போல் ரோகித், ராகுல், சூரியகுமார் யாதவ் ஆகிய முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய நிலையில் விராட் கோலி மற்றும் ஹர்டிக் பாண்டியா ஆகியோர் நங்கூரமான பார்ட்னர்ஷிப் அமைத்து வரலாற்று வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

- Advertisement -

அதே போல இப்போட்டியிலும் முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டிய நிலையில் அந்த இருவரும் மீண்டும் கைகோர்த்து இந்தியாவை சவாலான இலக்கை நிர்ணயிக்க உதவினார்கள். அதிலும் குறிப்பாக சூரியகுமார் யாதவ் அவுட்டானால் என்ன நான் இருக்கிறேன் என்ற வகையில் ஹர்டிக் பாண்டியா மிரட்டலாக பேட்டிங் செய்து காப்பாற்றினார்.

அந்த வகையில் அடிலெய்ட் மைதானத்தில் இந்த இலக்கை சவாலானதாக மாற்ற இந்திய பந்து வீச்சு சிறப்பாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. அதன் காரணமாக பேட்டிங்கில் கடினமாக உழைத்து சேர்த்து இந்த ரன்களை பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றியாக மாற்றி காட்டுவார்களா? இந்தியா பைனலுக்கு செல்லுமா? என்ன நடக்கப் போகிறதோ என்ற பரபரப்பான தருணங்களுடன் இந்திய ரசிகர்கள் இப்போட்டியை பார்த்து வருகிறார்கள்.

Advertisement