ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி வென்றது. கடந்த ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற அந்தத் தொடரில் ஃபைனலில் தென்னாபிரிக்காவை வீழ்த்திய இந்தியா 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வென்றது. அந்தப் போட்டியில் 177 ரன்களை துரத்திய தென்னாபிரிக்காவுக்கு ஹென்றிச் க்ளாஸென் அதிரடியாக விளையாடி இந்தியாவுக்கு அச்சுறுத்தலைக் கொடுத்தார்.
குறிப்பாக குல்தீப் வீசிய 16வது ஓவரில் 22 ரன்கள் அடித்த அவர் கிட்டத்தட்ட இந்தியாவின் வெற்றியை பறித்து விட்டார் என்று சொல்லலாம். ஆனால் அப்போது 17வது ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியா அவரை அவுட்டாக்கி திருப்பு முனையை உண்டாக்கினார். அப்படியே ஜஸ்ப்ரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் துல்லியமாக பவுலிங் செய்து தென்னாப்பிரிக்காவை மடக்கிப் பிடித்தனர்.
பாண்டியாவின் திருப்பு முனை:
கடைசியில் பாண்டியா வீசிய கடைசி ஓவரில் மில்லர் அடித்த சிக்ஸரை தடுத்த சூரியகுமார் அபார கேட்ச் பிடித்து இந்தியாவுக்கு கோப்பையை பெற்றுக் கொடுத்தார். இந்நிலையில் 2024 ஐபிஎல் தொடரில் தம்மை விமர்சித்த ரசிகர்களால் ஏற்பட்ட பாரத்தை டி20 உலகக் கோப்பையை வென்று இறக்கியதாக ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.
“நாங்கள் அணியாக கோப்பையை வென்றோம். ஆனால் என்னைப் பொறுத்த வரை கோப்பையை வெல்வதற்கு நான் முக்கியமான பங்காற்றியது நம்ப முடியாதது. உண்மையில் அது எனக்கு கனவு நிஜமான தருணமாகும். அந்த தருணத்தில் எனது தோளில் இருந்த ஒரு பெரிய எடை கீழே இறங்கியது. நான் எந்த சூழ்நிலையில் இருந்தேன் அல்லது நிறைய உணர்வுகளைக் காட்டாமல் இருந்த அந்தத் தருணத்தில் எழுந்து நின்று சிறப்பாக விளையாடியதற்காக பெருமையடைகிறேன்”
பாண்டியாவின் திட்டம்:
“அந்தப் பந்துக்கு முன்பாக க்ளாஸெனுக்கு எதிராக கொஞ்சம் ஒயிட் போன்ற பந்தை வீசப் போகிறேன் என்று ரோஹித் சர்மாவிடம் சொன்னேன். ஏனெனில் ஸ்டம்ப் லைனில் நான் வீசுவேன் என்று க்ளாஸென் எதிர்பார்ப்பார் என்பது எனக்குத் தெரியும். அவருடைய கால் கொஞ்சம் லெக் சைட் பகுதியில் இருந்ததால் அவர் என்னை அங்கே அடிப்பார் என்பது எனக்குத் தெரியும்”
இதையும் படிங்க: ரோஹித்தின் வழி தான் கரெக்ட்.. அதை வெச்சே இந்தியாவை வீழ்த்துவோம்.. பட்லர் பாராட்டுடன் நம்பிக்கை
“அதனால் பந்தை வீச ஓடுவதற்கு முன்பாக நான் ஸ்லோவான பந்தை வீசப் போகிறேன் என்று முடிவெடுத்தேன். அதே சமயம் அதற்கு தகுந்த ஃபீல்டிங்கை நான் அமைக்கவில்லை. எனவே ஒன்று அவரை நான் தந்திரமாக வீழ்த்த வேண்டும் அல்லது கொஞ்சம் முன்னோக்கி வீச வேண்டும். அப்போது தான் அற்புதமாக விளையாடிக் கொண்டிருந்த அவரால் அந்தப் பந்தை கணிக்க முடியாது. அப்படி கிடைத்த அந்த விக்கெட் தான் எங்களுடைய வெற்றிக்கான கதவைத் திறந்தது” என்று கூறினார்.