
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஏனெனில் அவ்விரு அணிகள் மோதும் போட்டிகள் எப்போதும் விறுவிறுப்பாக இருக்கும். அதற்கு எடுத்துக்காட்டாக 2022 டி20 உலகக் கோப்பை போட்டியை சொல்லலாம். மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் 160 ரன்களை துரத்திய இந்தியா 31/4 என ஆரம்பத்திலேயே தடுமாறியது.
அப்போது ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் இந்தியாவை தூக்கி நிறுத்தினார்கள். அதில் 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்த ஹர்திக் பாண்டியா நங்கூரமாக விளையாடி 40 ரன்கள் குவித்து நவாஸ் பந்தில் அவுட்டானார். அவருடன் சேர்ந்து விளையாடிய விராட் கோலி 82 ரன்கள் குவித்து அட்டகாசமான ஃபினிஷிங் கொடுத்தார்.
குறிப்பாக ஹரிஷ் ரவூப் வீசிய 19வது ஓவரின் கடைசிப் பந்தில் பின்னங்காலில் விராட் கோலி நேராக பறக்க விட்ட சிக்சர் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்நிலையில் அந்தப் போட்டியில் 31/4 என இந்தியா விழுந்த போது 20 ஓவர்கள் வரை நீங்கள் நங்கூரமாக விளையாட வேண்டும் என்று விராட் கோலியிடம் சொன்னதாக ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.
“அந்தப் போட்டியில் முதலாவதாக நம்மால் இதை செய்ய முடியும் என்று நான் நினைத்தேன். அது ஏறுவதற்கு மிகவும் கடினமான மலைப் போல தெரிந்தது. ஆனால் நிறையப் போட்டிகளில் நாம் விடும் வரை தோல்வி வரப்போவதில்லை அல்லவா? எனவே இது எங்களை நாங்களே நம்பி களத்தில் இருந்து ஒவ்வொரு பந்தாக ஒவ்வொரு படியாக ஏறுவதை பொறுத்ததாகும்”
“என்னைப் பொறுத்த வரை அப்போட்டியில் விராட் கோலி முடிந்தளவுக்கு நீண்ட நேரம் விளையாட வேண்டும் என்பதே இலக்காகும். அதனால் களத்திற்கு சென்றதும் 20 ஓவர் வரை நீங்கள் விளையாட வேண்டும் என்று அவரிடம் சொன்னேன். நவாஸ் பவுலிங் செய்ய வந்த போது என்னுடைய இடத்தில் வீசினால் அவரை நான் அடிக்கப் போகிறேன் என்று விராட் கோலியிடம் சொன்னேன்”
இதையும் படிங்க: பும்ரா இல்லனா கஷ்டம் தான்.. இருந்தாலும் வீழ்த்துவோம்.. இந்தியாவுக்கு பாகிஸ்தான் கோச் ஆறுதலுடன் எச்சரிக்கை
“அந்தப் போட்டியில் பயமின்றி எங்களுக்கு வெற்றியைப் பெறும் வாய்ப்பு கிடைத்தது. ஏனெனில் நாங்கள் பின் வாங்குவதற்கு எந்த இடமும் இல்லாமல் இருந்தது. அதனால் ரிஸ்க் எடுத்து விளையாடிய நாங்கள் அவரை அட்டாக் செய்ததும் எதிரணி பதற்றமடைந்ததை பார்க்க முடிந்தது. ஹரிஷ் ரவூப்க்கு எதிராக விராட் கோலி அடித்த சிக்ஸர் உணர்வுபூர்வமானது. அது எதிரணியின் முதுகெலும்பை உடைத்தது போல் அமைந்தது. சண்டையில் நீங்கள் இருக்கும் போது நிறைய விஷயங்கள் உங்களை நோக்கி வரும். அந்தப் போட்டி எப்போதும் நினைவு கொள்ளப்படும்” என்று கூறினார்.