நான் இப்படி வளர தோனியின் அந்த வார்த்தைகளே காரணம். நான் கப் ஜெயிக்கவும் அதான் காரணம் – பாண்டியா பேட்டி

Pandya
- Advertisement -

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 4 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளதால் 2 – 2* எனச் சமனில் உள்ள இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 5-வது மற்றும் கடைசி போட்டி ஜூன் 19 இரவு 7 மணிக்கு பெங்களூருவில் நடைபெறுகிறது. இந்த தொடரில் ஆரம்பம் முதலே இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்டிங் சுமாராக இருந்துவரும் நிலையில் அதை மிடில் ஆர்டரில் களமிறங்கும் தினேஷ் கார்த்திக் – ஹர்திக் பாண்டியா ஆகியோர் தங்கி பிடித்து வருகிறார்கள்.

இதில் நீண்ட நாட்களுக்கு பின் கம்பேக் கொடுத்துள்ள பாண்டியா 117 ரன்களை 153.94 என்ற நல்ல ஸ்டிரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி வருகிறார். உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தி ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக அபாரமாக செயல்பட்டதால் கடந்த 2016இல் அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனி தலைமையிலான இந்திய அணியில் அறிமுகமான இவர் ஆரம்பத்தில் தடுமாறினாலும் அடுத்த சில வருடங்களிலேயே 3 வகையான இந்திய அணியிலும் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராக உருவெடுத்து ஒரு சில வரலாற்று வெற்றிகளுக்கு முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

பாண்டியா ரிட்டர்ன்ஸ்:
அதனால் ஒருவழியாக ஜாம்பவான் கபில் தேவுக்கு பின் இந்தியாவுக்கு ஒரு தரமான வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் கிடைத்துவிட்டார் என்று இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் 2019 உலக கோப்பைக்கு பின் காயமடைந்த இவர் அதிலிருந்து குணமடைந்து வந்த போதிலும் பெரும்பாலும் பந்து வீசுவதை தவிர்த்து பேட்டிங்கிலும் சுமாராகவே செயல்பட்டு வந்தார். இருப்பினும் இவர் மீது நம்பிக்கை வைத்த இந்திய அணி நிர்வாகம் 2021 டி20 உலகக்கோப்பையில் நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்தது. ஆனால் அதில் பெரும்பாலான போட்டிகளில் பந்துவீசமால் பேட்டிங்கிலும் இவர் சுமாராக செயல்பட்டது இந்தியாவுக்கு படுதோல்வியை பரிசளித்தது.

அதனால் கடுப்பான தேர்வு குழுவினர் முழுமையாக குணமடைந்து பந்து வீசும் வரை இந்திய அணியில் இடமில்லை என்று அதிரடியாக நீக்கியது. அந்த நிலைமையில் மனம் தளராமல் கடுமையாக பயிற்சிகளை எடுத்து சமீபத்திய ஐபிஎல் 2022 தொடரில் அனுபவம் இல்லாத போதிலும் புதிதாக உருவாக்கப்பட்ட குஜராத் அணியை மிகச் சிறப்பாக வழிநடத்தி முதல் வருடத்திலேயே கோப்பையை வென்று காட்டினார். மேலும் ஒரு ஆல்-ரவுண்டராக 487 ரன்களையும் 8 விக்கெட்டுகளையும் எடுத்த அவர் கழற்றிவிட்ட அதே தேர்வு குழுவினர் மீண்டும் தாமாக தேர்வு செய்யும் அளவுக்கு தன்னை நிரூபித்துக் காட்டியுள்ளார்.

- Advertisement -

தோனியின் வார்த்தைகள்:
இந்நிலையில் தடுமாறிய ஆரம்ப காலத்தில் தேவையான வாய்ப்பையும் ஆதரவையும் கொடுத்த முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் உபயோகமான வார்த்தைகள்தான் தாம் ஒரு நல்ல கிரிக்கெட்டராக வளர உதவியதாக ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். இதுபற்றி ராஜ்கோட்டில் 46 ரன்கள் விளாசி இந்தியாவின் வெற்றிக்கு பங்காற்றிய பின் தினேஷ் கார்த்திக்குடன் அவர் பேசியது பின்வருமாறு. “பொதுவாக எந்த மாற்றத்தையும் நான் செய்வதில்லை. ஏனெனில் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் எனது இதயத்திற்கு மேல் உள்ள எனது அணியின் வெற்றிக்காக விளையாடுகிறேன்”

“இந்தியா மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக நான் செய்த செயலை எப்படி தொடர்ச்சியாக மென்மையாகவும் அடிக்கடி செய்ய முடியும் என்பதை மட்டுமே காலப்போக்கில் முன்னேற்றிக் கொள்ள விரும்புகிறேன். ஆரம்ப காலங்களில் மஹி பாய் (தோனி) எனக்கு ஒன்றை கற்றுக் கொடுத்துள்ளார். அவரிடம் “எப்படி நீங்கள் எல்லா நேரங்களிலும் அழுத்தத்தை தவிர்க்கிறீர்கள்?” என்று ஒருமுறை கேட்டேன். அதற்கு அவர் ஒரு எளிமையான ஆலோசனை வழங்கினார்”

- Advertisement -

“அதாவது “உங்களுடைய ஸ்கோரை பற்றி சிந்திப்பதை நிறுத்தி விட்டு உங்களின் அணிக்கு என்ன தேவை என்பதை சிந்திக்க ஆரம்பியுங்கள்” என்று அவர் பதிலளித்தார். அவரின் அந்த வார்த்தைகள் எனது மனதில் ஆழமாக நின்று தற்போது ஒரு நல்ல வீரராக நான் மாறியுள்ளதற்கு முக்கிய காரணமாக அமைந்து வருகிறது. அதன் வாயிலாக எந்த சூழ்நிலையாக இருந்தாலும் அங்கு சென்று அதற்கேற்றார்போல் விளையாடுகிறேன்” என்று கூறினார்.

அதாவது எந்த ஒரு போட்டியாக இருந்தாலும் அதில் சொந்த ஸ்கோரை நினைத்து பேட்டிங் செய்தால் அழுத்தம் தாமாகவே ஏற்படும் என்பதால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அணியை வெற்றிபெற வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் பேட்டிங் செய்தால் எந்தவித அழுத்தமும் ஏற்படாது என்று எம்எஸ் தோனி கூறிய வார்த்தைகள் தான் கடினமான தருணங்களில் சிறப்பாக செயல்பட வைத்து தம்மை ஒரு நல்ல வீரராக உருவெடுக்க வைத்துள்ளதாக ஹர்திக் பாண்டியா வெளிப்படையாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க : IND vs RSA : கடைசி டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – என்னென்ன மாற்றம்

தற்போது ஐபிஎல் 2022 கோப்பையை வென்றுள்ள அவர் விரைவில் அயர்லாந்தில் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணிக்கு முதல் முறையாக கேப்டனாக செயல்படும் அளவுக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement