
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் போட்டி செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. துபாயில் நடைபெற்ற அப்போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா தங்களது 2வது வெற்றியைப் பெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 20 ஓவரில் 127/9 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதிகபட்சமாக ஃபர்ஹான் 40, ஷாஹின் அப்ரிடி 33* ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 2, அக்சர் படேல் 2, குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்து விளையாடிய இந்தியா பொறுப்புடன் பேட்டிங் செய்து 15.5 ஓவரில் 131/3 ரன்களை எடுத்து எளிதாக வென்றது. அதிகபட்சமாக அபிஷேக் ஷர்மா 31, கேப்டன் சூரியகுமார் யாதவ் 47*, திலக் வர்மா 31 ரன்கள் எடுத்தார்கள்.
பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக சாய்ம் ஆயுப் 3 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. முன்னதாக பாகிஸ்தான் அணிக்காக சமீப காலங்களில் இளம் வீரர் சாய்ம் ஆயுப் ஓப்பனிங்கில் அதிரடியாக விளையாடி வருகிறார். அப்படிப்பட்ட அவர் கடந்தப் போட்டியில் ஓமனுக்கு எதிராக டக் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தைச் சந்தித்தார். அப்போது அடுத்தப் போட்டியில் இந்தியாவின் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு எதிராக ஆயுப் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களாக அடிப்பார் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் தன்வீர் அகமது கணித்தார்.
இது பற்றி ஓமனுக்கு எதிரான போட்டியின் முடிவில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் கூறியது பின்வருமாறு. “சாய்ம் ஆயுப் இந்த ஆசியக் கோப்பையில் ஜஸ்ப்ரித் பும்ராவை 6 சிக்ஸர்களாக அடிப்பார் என்று நான் நினைக்கிறேன்” எனக் கூறியிருந்தார். அப்போதே இந்திய ரசிகர்கள் அவருக்கு சமூக வலைதளங்களில் பதிலடி கொடுத்திருந்தனர்.
அந்த சூழ்நிலையில் நடைபெற்ற இப்போட்டியில் ஹர்திக் பாண்டியா முதல் ஓவரின் முதல் பந்திலேயே சாய்ம் ஆயுப்பை கோல்டன் டக் அவுட்டாக்கினார். ஆச்சரியப்படும் வகையில் பாண்டியா வேகத்தில் அவர் அடித்த பந்து நேராக ஜஸ்ப்ரித் பும்ராவின் கைகளில் சென்று விழுந்தது. அந்த வகையில் யாருக்கு எதிராக 6 சிக்ஸர்கள் அடிப்பார் என்று தன்வீர் கணித்தாரோ அவருடைய (பும்ரா) கையிலேயே ஆயுப் கேட்ச்சாகி அவுட்டானார்.
இதையும் படிங்க: இந்த வெற்றி உங்களுக்கு தான்.. பாக் அணிக்கெதிரான வெற்றிக்கு பின்னர் துணை கேப்டன் – சுப்மன் கில் உருக்கம்
அந்த வகையில் வாயில் சவால் விட்ட முன்னாள் பாகிஸ்தான் வீரருக்கு சாய்ம் ஆயுப்பை கோல்டன் டக் அவுட்டாக்கி பாண்டியா பதிலடி கொடுத்தார் என்றே சொல்லலாம். மொத்தத்தில் அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்ற இந்தியா சூப்பர் 4 சுற்றை நெருங்கியுள்ளது. இன்னும் 1 வெற்றி பெற்றால் இந்தியா அதிகாரப்பூர்வமாக சூப்பர் 4க்குள் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.