- Advertisement -
இந்திய கிரிக்கெட்

117க்கு அவுட்.. முதல் வீரராக பாண்டியா 2 தனித்துவமான வரலாற்று சாதனை.. தெ.ஆ’வை சுருட்டிய இந்தியா

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியாவை 2வது போட்டியில் தோற்கடித்த தென்னாப்பிரிக்கா பதிலடி கொடுத்தது. அதைத் தொடர்ந்து 3வது போட்டி டிசம்பர் 14ஆம் தேதி அழகான தரம்சாலா கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7:00 மணிக்கு துவங்கியது.

அப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு முதல் ஓவரிலேயே அர்ஷ்தீப் வேகத்தில் ரீஸா ஹென்றிக்ஸ் டக் அவுட்டானார். மறுபுறம் தடுமாறிய குவிண்டன் டீ காக்’கை 1 (3) ரன்னில் அவுட்டாக்கிய ஹர்ஷித் ராணா அடுத்து வந்த தேவால்ட் ப்ரேவிஸை 2 (7) ரன்களில் அவுட்டாக்கி அசத்தினார்.

- Advertisement -

இந்தியா அசத்தல்:

அதனால் 7/3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய தென் ஆப்பிரிக்காவுக்கு கேப்டன் ஐடன் மார்க்ரம் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். ஆனால் எதிர்ப்புறம் வந்த த்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 9 (13) ரன்களில் தடுமாறி ஹர்திக் பாண்டியா வேகத்தில் பெவிலியன் திரும்பினார். லோயர் ஆர்டரில் கோர்பின் போஸ்க் 4, மார்கோ யான்சென் 2 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தார்கள்.

மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாக விளையாடி வந்த கேப்டன் ஐடன் மார்க்ரம் 6 பவுண்டரி 2 சிக்ஸருடன் 61 (46) ரன்கள் குவித்து போராடி அவுட்டானார். கடைசியில் பெரிரா 20, அன்றிச் நோர்ட்ஜெ 12 ரன்களை எடுத்தும் 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தென்னாப்பிரிக்கா 117 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

பாண்டியா 2 சாதனை:

இந்தியாவுக்கு அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தார்கள். அதே போல ஹர்திக் பாண்டியா மற்றும் சிவம் துபே ஆகியோரும் தலா 1 விக்கெட் எடுத்து அசத்தினர். இதையும் சேர்த்து ஹர்திக் பாண்டியா தம்முடைய டி20 கேரியரில் இந்தியாவுக்காக 100 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

இதையும் படிங்க: முதல் இந்திய வீரராகவும் நான்காவது சர்வதேச வீரராகவும் மாபெரும் சாதனையை நிகழ்த்திய – ஹார்டிக் பாண்டியா

அத்துடன் பேட்டிங்கில் அவர் ஏற்கனவே 1370 ரன்கள் குவித்துள்ளார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 1000+ ரன்கள் மற்றும் 100+ விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற தனித்துவமான சாதனையை ஹர்திக் பாண்டியா படைத்துள்ளார். அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் குறைந்தது 1000+ ரன்கள், 100+ விக்கெட்டுகள், 100+ சிக்ஸர்கள் (101) அடித்த முதல் இந்திய வீரர் என்ற தனித்துவமான சாதனையையும் பாண்டியா படைத்துள்ளார்.

- Advertisement -