ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மொகாலியில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் பின்தங்கியுள்ளது. சமீபத்திய ஆசிய கோப்பையில் தோல்வியை பரிசளித்த காரணங்களை சரிசெய்து கொண்டு விரைவில் நடைபெறும் உலக கோப்பையை வெல்வதற்கு தயாராகும் வகையில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் நேற்றைய முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் அதிரடியாக 208/6 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் கேஎல் ராகுல் 55 (35) ரன்களும் சூர்யகுமார் யாதவ் 46 (25) ரன்களும் ஹர்திக் பாண்டியா 71* (30) ரன்களும் குவித்தனர்.
அதை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு கேப்டன் ஆரோன் பின்ச் 22 (13), ஸ்டீவ் ஸ்மித் 35 (24) என முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்க தவறினாலும் இளம் தொடக்க வீரர் கேமரூன் கிரீன் அதிரடியாக 8 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 61 (30) ரன்கள் எடுக்க இறுதியில் மேத்யூ வேட் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 45* (21) ரன்கள் குவித்து பினிஷிங் செய்தார். அதனால் தோல்வியடைந்த இந்தியா இத்தொடரை வென்று சொந்த மண்ணில் வலுவான அணி என்பதையும் தரவரிசையில் நம்பர் ஒன் டி20 அணி என்பதையும் நிரூபிக்க கடைசி 2 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
பலே பாண்டியா:
இந்த போட்டியில் 209 என்ற பெரிய இலக்கை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அக்சர் படேல் தவிர எஞ்சிய அனைத்து இந்திய பவுலர்களும் வள்ளல் பரம்பரையாக ரன்களை வாரி வழங்கினர். அதனால் முதலில் பேட்டிங்கில் அற்புதமாக செயல்பட்டு வெற்றிக்காக போராடிய இந்திய பேட்ஸ்மேன்களின் போராட்டம் வீணானது. குறிப்பாக ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அதிரடியாக ரன்களை சேர்த்து ஆட்டமிழந்ததும் 16 ஓவர்களில் 146/5 என தடுமாறிய இந்தியா 200 ரன்களை தொடுமா என்ற கேள்வி எழுந்த போது பட்டையை கிளப்பும் வகையில் பேட்டிங் செய்த ஹர்திக் பாண்டியா 7 பவுண்டரி 5 சிக்சருடன் 71* (30) ரன்களை 236.67 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி அற்புதமான பினிஷிங் கொடுத்தார்.
ஜாம்பவான் கபில் தேவுக்கு பின் வளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த அவர் 2019 உலகக்கோப்பை பின் சந்தித்த காயத்தால் பார்மை இழந்து கடந்த டி20 உலக கோப்பையில் சுமாராக செயல்பட்டதால் அதிரடியாக நீக்கப்பட்டார். இருப்பினும் மனம் தளராமல் ஐபிஎல் 2022 தொடரில் குஜராத் அணிக்கு மிகச் சிறந்த ஆல்-ரவுண்டராகவும் அனுபவமில்லாத கேப்டன்ஷிப் பதவியில் அற்புதமாகவும் செயல்பட்டு கோப்பையை வென்ற அவர் விமர்சனங்களை அடித்து நொறுக்கி கம்பேக் கொடுத்தார். அதன் பின் நடந்த தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் என சமீபத்திய டி20 தொடர்களில் அபாரமாக செயல்பட்ட அவர் இந்தியாவின் தொடர் வெற்றிகளுக்கு கருப்பு குதிரையாக செயல்பட்டார்.
சூப்பர் சாதனைகள்:
அத்துடன் சமீபத்திய ஆசிய கோப்பையில் பாகிஸ்தானை தோற்கடிக்க ஆட்ட நாயகன் விருதை வென்று முக்கிய பங்காற்றிய அவர் உலகக் கோப்பைக்கு முன்பாக பழைய ஃபார்முக்கு பழைய பாண்டியாவாக திரும்பியுள்ளது இந்தியாவுக்கு மிகப்பெரிய பலத்தை கொடுக்கிறது.
1. இப்போட்டியில் 71* ரன்களை விளாசிய அவர் டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து சாதனை படைத்தார்.
2. மேலும் மொத்தமாக 5 சிக்சர்களை பறக்க விட்ட அவர் அதில் 3 சிக்ஸர்களை கேமரூன் க்ரீன் வீசிய கடைசி ஓவரின் கடைசி 3 பந்துகளில் ஹாட்ரிக் சிக்ஸர்களாக விளாசினார். அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கடைசி ஓவரில் அதிக சிக்சர்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை எம்எஸ் தோனி, நஜிபுல்லா ஜாட்ரான், தசுன் சணாக்கா ஆகியோருடன் பாண்டியா பகிர்ந்து கொண்டார். இந்த நால்வருமே மொத்தமாக தலா 12 சிக்சர்களை அடித்துள்ளனர். முதலிடத்தில் தென் ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லர் 17 சிக்சர்களுடன் உள்ளார்.
இதையும் படிங்க: IND vs AUS : ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்த ரோஹித் சர்மா – இதுவே விராட் கோலி கேப்டனாக இருந்தால்? ரசிகர்கள் அதிருப்தி
3. அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் 5வது இடத்தில் களமிறங்கி 2 முறை அரை சதமடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் அவர் படைத்தார். இப்போட்டியில் 71* ரன்கள் குவித்த அவர் கடந்த சில மாதங்களுக்கு முன் இங்கிலாந்துக்கு எதிராக சவுதம்ப்டன் நகரில் நடந்த டி20 போட்டியிலும் 5வது இடத்தில் களமிறங்கி 51 (33) ரன்களைக் குவித்து வெற்றி பெற வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.