வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது. குவாலியரில் அக்டோபர் ஆறாம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசத்தை 127 ரன்களுக்கு இந்தியா சுருட்டியது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் சான்டோ 27, மெகதி ஹசன் 35* ரன்கள் எடுத்தனர்.
இந்திய அணிக்கு அதிகபட்சமாக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத்தொடர்ந்து 128 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு சஞ்சு சாம்சன் 29, கேப்டன் சூரியகுமார் யாதவ் 29, அபிஷேக் ஷர்மா 16, நித்திஷ் ரெட்டி 16*, ஹர்திக் பாண்டியா 39* ரன்கள் எடுத்தனர். அதனால் 11.5 ஓவரிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
பாண்டியாவின் சாதனை:
முன்னதாக இப்போட்டியில் மிடில் ஆர்டரில் களமிறங்கி அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்டியா 5 பவுண்டரி 2 சிக்சருடன் 39* (16) ரன்கள் குவித்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். குறிப்பாக தஸ்கின் அகமது வீசிய 12வது ஓவரின் 5வது பந்தில் பாண்டியா அதிரடியான சிக்ஸரை பறக்க விட்டு போட்டியை முடித்தார். இதையும் சேர்த்து ஹர்திக் பாண்டியா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 5 முறை சிக்ஸருடன் போட்டியை வெற்றிகரமாக முடித்துள்ளார்.
இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை சிக்ஸருடன் போட்டியை முடித்த இந்திய வீரர் என்ற சாதனையை ஹர்திக் பாண்டியா படைத்துள்ளார். இதற்கு முன் விராட் கோலி அதிகபட்சமாக 4 போட்டிகளில் சிக்ஸருடன் ஃபினிஷிங் செய்ததே முந்தைய சாதனையாகும். அவருக்கு அடுத்தபடியாக எம்.எஸ் தோனி மற்றும் ரிஷப் பண்ட் (தலா 3 முறை) ஆகியோர் அந்த பட்டியலில் 3வது இடத்தில் உள்ளனர்.
சூரியகுமார் சாதனை:
அந்த வகையில் இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா ஆல் ரவுண்டராக தொடர்ந்து அசத்தி வருகிறார். இந்த சாதனையின் வாயிலாக அவர் இந்திய அணியின் ஒரு சிறந்த பினிஷர் என்பதையும் நிரூபித்துள்ளார். அதே போல கேப்டன் சூரியகுமார் யாதவ் இப்போட்டியில் மொத்தம் 3 சிக்சர்கள் அடித்தார்.
இதையும் படிங்க: 51/4 டூ 139/4.. சம்மி மேஜிக்.. தாஹிர் அணியை வீழ்த்தி டு பிளேஸிஸ் அணி 16 வருட கனவை நிஜமாக்கியது எப்படி?
இந்த மூன்று சிக்ஸர்களையும் சேர்த்து அவர் இந்தியாவுக்காக 139* சிக்ஸர்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த 4வது வீரர் என்ற இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரோஹித் சர்மா: 205
2. மார்ட்டின் கப்டில்: 173
3. நிக்கோலஸ் பூரான்: 144
4. சூரியகுமார் யாதவ்: 139*
5. ஜோஸ் பட்லர்: 137



