சயீத் முஷ்டாக் அலி கோப்பை 2024 உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதில் நவம்பர் 29ஆம் தேதி இந்தூரில் நடைபெற்ற குரூப் பி பிரிவின் ஒரு ஆட்டத்தில் பரோடா மற்றும் திரிபுரா அணிகள் மோதின. அப்போட்டியில் முதலில் பேட்டிங் திரிபுரா அணி சுமாராக விளையாடி 20 ஓவரில் 109-9 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதிகபட்சமாக கேப்டன் மந்திப் 50 (40) ரன்கள் எடுத்த நிலையில் பரோடாவுக்கு அதிகபட்சமாக அபிமன்யு சிங் 3 விக்கெட்டுகளை எடுத்தார். பின்னர் 110 ரன்களை துரத்திய பரோடாவுக்கு அஸ்வின்குமார் 17, சிவாலிக் சர்மா 6 ரன்களில் அவுட்டானாலும் துவக்க வீரர் மித்தேஷ் பட்டேல் 37* (24) ரன்கள் எடுத்தார். அவருடன் மிடில் அடரில் அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்டியா 3 பவுண்டரி 5 சிக்ஸருடன் 47 (23) ரன்கள் விளாசினார்.
பாண்டியா அசத்தல்:
குறிப்பாக இடது கை ஸ்பின்னர் சுல்தான் வீசிய 10வது ஓவரில் மட்டும் 6, 0, 6, 6, 4, 6 என அடுத்தடுத்த பவுண்டரிகளை பறக்க விட்ட பாண்டியா 28 ரன்கள் குவித்தார். அவருடைய ஆட்டத்தால் 11.2 ஓவரிலேயே 115-3 ரன்கள் எடுத்த பரோடா 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. அந்த வகையில் ஐசிசி டி20 தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் ஆல் ரவுண்டராக இருக்கும் பாண்டியா இந்தப் போட்டியிலும் அதை நிரூபிக்கும் வகையில் அசத்தினார்.
அதே போல ஹைதராபாத் நகரில் குரூப் ஈ பிரிவில் மும்பை மற்றும் கேரளா அணிகள் மோதின. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கேரளா அதிரடியாக விளையாடி 234-5 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரோகித் குன்னும்மால் 87 (48), சல்மான் நிஸார் சதத்தை நழுவ விட்டாலும் 99* (49) ரன்கள் குவித்து அசத்தினார்கள்.
தாகூர் சொதப்பல்:
மும்பைக்கு அதிகபட்சமாக மோகித் அவஸ்தி 4 விக்கெட்டுகள் எடுத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சர்தூள் தாக்கூர் 4 ஓவரில் சஞ்சு சாம்சன் விக்கெட்டை எடுத்தாலும் 69 ரன்களை வாரி வழங்கினார். அதன் வாயிலாக சயீத் முஷ்டாக் அலி கோப்பை வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் வாரி வழங்கிய வீரர் என்ற மோசமான சாதனையை படைத்தார்.
இதையும் படிங்க: அடிப்படை விலைக்கு கூட ப்ரித்வி ஷாவை ஏலத்தில் எடுக்காததன் காரணம் என்ன? – விவரம் இதோ
இப்படி சமீப காலங்களில் மோசமாக பந்து வீசுவதாலேயே அவரை 2025 ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் எடுக்கவில்லை. அந்த சூழ்நிலையில் இதைப் பார்க்கும் ரசிகர்கள் நல்லவேளையாக அவரை யாரும் எடுக்கவில்லை என்று அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இறுதியில் 235 ரன்களை துரத்திய மும்பைக்கு அதிகபட்சமாக ரஹானே 68 (35), ஸ்ரேயாஸ் ஐயர் 32 (18) ரன்கள் எடுத்தும் 191-9 ரன்களை மட்டுமே எடுத்து தோற்றது. மறுபுறம் 43 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற கேரளாவுக்கு அதிகபட்சமாக நிதீஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.