ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரிலிருந்து இந்தியாவுக்காக ஒவ்வொரு வருடமும் நிறைய தரமான இளம் வீரர்கள் கிடைத்து வருகின்றனர். அந்த வகையில் இந்த வருடம் ஹைதராபாத் அணியில் அபிஷேக் சர்மா மற்றும் நித்திஷ் ரெட்டி ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடினார்கள். குறிப்பாக ஆல் ரவுண்டராக அசத்திய நிதிஸ் ரெட்டி 303 ரன்கள் அடித்து ஹைதராபாத் ஃபைனல் வரை செல்வதற்கு தம்முடைய பங்காற்றினார்.
அதனால் 2023 உலகக் கோப்பை வென்ற கேப்டன் பட் கமின்ஸ் பாராட்டுகளையும் அவர் பெற்றார். அதன் காரணமாக சமீபத்திய ஜிம்பாப்வே டி20 தொடரில் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை நித்திஷ் ரெட்டி மற்றும் அபிஷேக் சர்மா பெற்றனர். ஆனால் அதில் அபிஷேக் ஷர்மா அறிமுகமாக களமிறங்கி சதமடித்து அசத்திய நிலையில் நிதிஸ் ரெட்டி கடைசி நேரத்தில் காயமடைந்து வெளியேறினார்.
2 ரோல் மாடல்:
இந்நிலையில் இந்தியாவின் ஹர்திக் பாண்டியா மற்றும் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தம்முடைய ரோல் மாடல் என நித்திஷ் ரெட்டி தெரிவித்துள்ளார். அத்துடன் ஹர்திக் பாண்டியா தமக்கு முக்கியமான ஆலோசனைகளை கொடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாரான பரபரப்பான சூழ்நிலையில் கூட ஹர்திக் பாண்டியா தமக்கு மெசேஜ் செய்ததாக அவர் கூறியுள்ளார்.
அதை கேட்டு வியப்படைந்ததாக தெரிவிக்கும் நிதிஷ் ரெட்டி இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “ஹர்திக் பாண்டியா பாய் எனக்கு மெசேஜ் செய்து களத்தில் என்னுடைய எண்ணம் மற்றும் எனர்ஜி நன்றாக இருப்பதாக வாழ்த்தினார். மேலும் தொடர்ந்து விளையாட்டை மதித்து விளையாடுமாறு சொன்னார். அத்துடன் விரைவில் நாம் நேரில் பேசுவோம் என்றும் பாண்டியா சொன்னார்”
“ஆனால் ஐபிஎல் தொடர் முடிந்ததும் அவர் எனக்கு அனுப்பிய அந்த மெசேஜ்களை பார்த்து நான் வியப்படைந்தேன். ஏனெனில் அவர் டி20 உலகக் கோப்பைக்கு தயாராக மிகவும் பிசியாக இருந்தார். ஹர்திக் பாண்டியா மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் நான் ஆல் ரவுண்டராக வருவதற்கான உத்வேகமாக இருக்கிறார்கள். எனவே மெசேஜ் அனுப்பியதற்காக நன்றி என்று நான் பாண்டியாவுக்கு பதிலளித்தேன்” என்று கூறினார்.
இதையும் படிங்க: நான் ஆர்சிபி ரசிகன்.. என்னோட பெயரை அவரை நினைவில் வெச்சுருந்ததே பெரிய விஷயம்.. நிதிஷ் ரெட்டி
அந்த வகையில் நித்திஷ் ரெட்டி போன்ற வீரர்களுக்கு உத்வேகமாக இருக்கும் ஹர்திக் பாண்டியா 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு துணை கேப்டனாக முக்கிய பங்காற்றினார். இதைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிராக விரைவில் துவங்கும் டி20 தொடரில் பாண்டியா விளையாட உள்ளார். ஆனால் அதில் அவர் சாதாரண வீரராக மட்டுமே விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.



