இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக துவங்கும் அந்தத் தொடரில் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக விளையாடப் போவது யார் என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது. தற்சமயத்தில் அந்த இடத்தில் நித்திஷ் ரெட்டி விளையாடுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்றே சொல்லலாம்.
ஏனெனில் கடந்த ஆஸ்திரேலிய தொடரில் அறிமுகமான அவர் 5 போட்டிகளிலும் விளையாடினார். அந்தத் தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற நட்சத்திர வீரர்களே தடுமாறிய போது சிறப்பாக விளையாடிய அவர் மெல்போர்ன் போட்டியில் சதத்தை அடித்து இந்தியாவின் வெற்றிக்கு போராடினார். மேலும் பவுலராக 2 விக்கெட்டுகளை எடுத்த அவர் வருங்காலத்தில் அசத்தப் போகும் நம்பிக்கை நட்சத்திரமாக தன்னை அடையாளப்படுத்தினார்.
போட்டிக்கு தாக்கூர்:
தற்போது அவருக்கு சர்துல் தாக்கூர் போட்டியாக வந்துள்ளது சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. 2021 காபா டெஸ்ட் போட்டியில் அசத்திய அவர் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியாவின் சரித்திர வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அதே போல 2021 லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியிலும் ஆல் ரவுண்டராக அசத்திய தாகூர் இந்தியாவின் வெற்றிக்கு கருப்பு குதிரையாக செயல்பட்டார்.
அதன் பின் சிறப்பாக செயல்படத் தவறியதால் கழற்றி விடப்பட்ட அவர் கடந்த ரஞ்சிக் கோப்பையில் மும்பை அணிக்காக அபாரமாக விளையாடினார். அதன் காரணமாக மீண்டும் இந்திய அணியில் தேர்வாகியுள்ள அவர் கம்பேக் கொடுத்துள்ளார். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற பயிற்சி போட்டியில் பும்ரா, சிராஜ் உள்ளிட்ட நட்சத்திர பவுல்களை அடித்து நொறுக்கிய தாக்கூர் 122 ரன்கள் குவித்து மிரட்டினார்.
ஹர்பஜன் கருத்து:
இந்நிலையில் இங்கிலாந்து தொடரில் சர்துல் தாக்கூரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஹர்பஜன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார். அதற்கான முக்கிய காரணம் பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கொஞ்சம் பேட்டிங் செய்யத் தெரிந்த பவுலர் இந்தியாவுக்கு தேவை. 7, 8வது இடம் வரை செய்யக்கூடிய வீரர்கள் நம்மிடம் உள்ளார்கள். எனவே யார் பந்து வீச்சில் முக்கியமான விக்கட்டுகளை எடுத்து பேட்டிங்கிலும் பங்காற்றுவார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்”
இதையும் படிங்க: என்னை கஷ்டப்படுத்திய இந்திய சூப்பர்ஸ்டார் பும்ராவை.. இங்கிலாந்து சமாளிக்கலன்னா கஷ்டம்.. பட்லர் பேட்டி
“மாறாக அதிகமாக பேட்டிங் செய்து கொஞ்சமாக பௌலிங் செய்யக்கூடிய வரை பார்க்கக்கூடாது. இந்த விஷயத்தில் தான் என்னுடைய பார்வையில் நிதிஷ் ரெட்டியை விட தாகூர் முன்னிலை பெறுகிறார். நித்திஷ் ரெட்டி கொஞ்சம் பௌலிங் செய்யக்கூடிய முழுமையான பேட்ஸ்மேன். ஆனால் அவர் ஐபிஎல் தொடரில் நிறைய பௌலிங் செய்ததை நான் பார்க்கவில்லை. எனவே திறமையான பயிற்சியாளரான கௌதம் கம்பீர் சரியான முடிவை எடுப்பார் என்று நம்புகிறேன்” என கூறினார்.



