இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. ஜூன் 20ஆம் தேதி முதல் துவங்கும் அந்தத் தொடரில் ஜஸ்பிரித் பும்ரா இங்கிலாந்துக்கு சிம்ம சொப்பனமாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிக்கு போராடுவார் என்று நம்பப்படுகிறது. வித்தியாசமான பவுலிங் ஆக்சனைக் கொண்ட அவர் கடந்த ஆஸ்திரேலிய தொடரில் தனி ஒருவனாக இந்தியாவின் வெற்றிக்கு போராடினார்.
முதல் போட்டியிலேயே 8 விக்கெட்டுகளை எடுத்த அவர் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா மிகப்பெரிய சாதனை வெற்றியை பதிவு கேப்டனாக முக்கிய பங்காற்றினர். அத்தொடர் முழுவதும் ஆஸ்திரேலியர்களை தெறிக்க விட்ட பும்ரா தம்மை உலகில் நம்பர் ஒன் பவுலர் என்பதை நிரூபித்தார் என்றே சொல்லலாம். இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ரா இந்தியாவின் சூப்பர்ஸ்டார் பவுலர் என்று இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லர் பாராட்டியுள்ளார்.
கஷ்டப்படுத்திய பும்ரா:
இத்தொடரை வெல்ல வேண்டுமெனில் அதற்கு பும்ராவை இங்கிலாந்து சமாளிப்பது முக்கியம் என்றும் பட்லர் கூறியுள்ளார். மேலும் ஒரு பேட்ஸ்மேனாக ஜஸ்பிரித் பும்ராவை எதிர்கொள்ள தாம் சிரமப்பட்டது பற்றி பட்லர் பேசியது பின்வருமாறு. “தற்போதைய இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ராவை விட சூப்பர் ஸ்டார் யாருமில்லை. அவருடைய ஆக்சன், ரன்-அப் ஆகியவை தனித்துவமானது”
“அவருடைய வித்தியாசமான கோணங்களை எதிர்கொள்வது மிகவும் கடினமாக இருக்கும். பெரும்பாலான பவுலர்கள் பக்கவாட்டில் இருந்து பௌலிங் செய்வதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அவர் ஒரு அடி முன்பாக அல்லது மற்ற பந்து பவுலர்களை விட பேட்ஸ்மேனுக்கு சற்று நெருக்கமாக பவுலிங் செய்கிறார். எனவே அவருடைய பந்துகள் நீங்கள் நினைக்கும் வேகத்தை விட விரைவாக வருவது போல் தெரியும்”
பட்லர் பாராட்டு:
“ஒரு வலது கை பேட்ஸ்மேனாக அவருடைய பந்துகள் உங்களுக்கு எதிராக உள்நோக்கி வருவதைப் போன்ற உணர்வைக் கொடுக்கும். கடைசியில் பார்த்தால் என்னை அவர் வெளியே வீழ்த்துவார். அதனால் அவரை எதிர்கொள்ளும் போது உங்களுக்கு நீங்களே பயங்கரமான இடத்தில் இருப்பது போல உணர்வீர்கள். இந்த வகையில் பும்ரா சூப்பர் ஸ்டார் பவுலர். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் நீங்கள் அதைத்தான் எதிர்பார்த்தீர்கள்”
இதையும் படிங்க: டெஸ்ட் சீரியஸ்ல பும்ரா மட்டும் இதை பண்ணா அது எங்க டீமுக்கு தான் ஆபத்து – ஸ்டூவர்ட் பிராடு கருத்து
“நீங்கள் சிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாடுவதை விரும்புவீர்கள். இந்த தொடரில் இங்கிலாந்து வெற்றிகரமாக செயல்பட வேண்டுமெனில் அவருக்கு எதிராக சிறப்பாக விளையாடுவது முக்கியம்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இத்தொடரின் முதல் போட்டி லீட்ஸ் நகரில் வரும் வெள்ளிக்கிழமை இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு துவங்குகிறது.



