
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற்று முடிந்த வேளையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது இன்று துவங்க உள்ளது. கொல்கத்தா மைதானத்தில் நடைபெறும் இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது பிப்ரவரி 16ஆம் தேதி துவங்கி பிப்ரவரி 20ம் தேதி முடிவடைகிறது. இந்த தொடருக்கான t20 இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேளையில் அதில் இடம் பிடித்திருந்த துணை கேப்டன் ராகுல் காயம் காரணமாக வெளியேறி உள்ளதால் அவருக்கு பதிலாக மாற்று வீரராக ஏற்கனவே ருதுராஜை பிசிசிஐ அறிவித்திருந்தது.
அதன்படி தற்போது இன்று துவங்கவுள்ள இந்த முதலாவது டி20 போட்டிக்கான இந்திய அணி தயாராக இருந்தாலும் இன்றைய போட்டியில் ரோகித்துடன் களம் இறங்கப்போகும் துவக்க வீரர் யார் என்ற கேள்வி அதிகளவில் எழுந்துள்ளது. ஏனெனில் தற்போது தொடக்க வீரருக்கான போட்டியில் இஷான் கிஷனுடன், ருதுராஜ் கெய்க்வாட் இணைந்துள்ளதால் இந்த இருவரில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
இந்நிலையில் இந்திய அணியில் ரோகித் சர்மாவுடன் யாரை துவக்க வீரராக களமிறக்க வேண்டும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : தற்போது இந்திய அணி இருக்கும் சூழ்நிலையில் ரோஹித் உடன் இஷான் கிஷனே களம் இறங்கலாம். ஏனெனில் ஏற்கனவே ராகுல் ஒருநாள் போட்டிகளில் 5வது இடத்தில் இறங்கி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இப்படி ஒரு நாள் கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரில் இறங்கி சிறப்பாக விளையாடும் ராகுல் டி20 கிரிக்கெட்டிலும் அதேபோன்று மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாட முடியும் எனவே என்னை பொறுத்தவரை ராகுலை டி20 கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரில் விளையாட விட்டு இஷான் கிஷனை துவக்க வீரராக விளையாட வைப்பதே சரியான முடிவு. இதனால் இந்திய அணியின் பலம் அதிகரிக்கும். மேலும் என்னுடைய கருத்தின்படி இஷான் கிஷனை துவக்க வீரராக களமிறங்க இனி தயார் படுத்த தேவை கிடையாது. அவர் ஏற்கனவே அதற்கு தயாராக இருக்கிறார்.
எனவே நிச்சயம் ரோகித் சர்மாவுடன் அவர் தான் துவக்க வீரராக களம் இறங்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இஷான் கிஷன் நான் ஏற்கனவே கூறியது போல அதிரடியான ஒரு வீரர். அவரால் நிச்சயம் தனியாளாக போட்டியின் சூழ்நிலையை மாற்றி வெற்றி பெற்று தர முடியும். என்னை பொறுத்தவரை இஷான் கிஷன் துவக்க வீரராக களம் இறக்கப்பட்டால் பவர் பிளே ஓவர்களிலேயே 40 முதல் 60 ரன்கள் நமக்கு கிடைத்து விடும். அந்த அளவிற்கு அவர் பயமின்றி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கூடியவர்.
இதையும் படிங்க : INDvsWI டி20 : இன்னைக்காவது இந்திய அணியில் விளையாட இவருக்கு ஒரு வாய்ப்பு குடுங்க – ரசிகர்கள் ஆதரவு
எனவே இவரை போன்ற ஒரு பயமற்ற வீரர்தான் இந்திய அணியில் துவக்க வீரராக விளையாட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே மும்பை அணிக்கு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இஷான் கிஷன் இந்த ஆண்டும் மும்பை அணியால் நடைபெற்று முடிந்த மெகா ஏலத்தில் 15.25 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளார். அதே வேளையில் அவருக்கு போட்டியாக இருக்கும் ருதுராஜ் கெய்க்வாட் ஏற்கனவே சென்னை அணியால் நேரடியாக தக்கவைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.