இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி ஜூலை 23ஆம் தேதி மான்செஸ்டரில் துவங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த மெகா டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கிறது. எனவே தொடரை சமன் செய்ய 4வது போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்துடன் இந்தியா விளையாட உள்ளது.
அந்தப் போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா பணிச்சுமை காரணமாக விளையாடுவாரா? என்பது தெரியவில்லை. அதே போல இந்தியா வெற்றி பெறுவதற்கு 5 பவுலர்களுடன் விளையாடுவதாக அவசியம் என்று நிறைய முன்னாள் வீரர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்நிலையில் 4வது போட்டியில் குல்தீப் யாதவ் இந்தியாவிற்காக விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.
இங்கிலாந்தை மடக்கலாம்:
அதே போல பேட்டிங் துறையில் தமிழக வீரர் சாய் சுதர்சனை அறிமுகப் போட்டியுடன் தூக்கி எறிந்தது சரியல்ல என்றும் ஹர்பஜன் சாடியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “குல்தீப் விளையாட வேண்டும். இங்கிலாந்து கிரிக்கெட்டின் அதிரடியான பிராண்டை விளையாட விரும்புகிறார்கள். ஆனால் அவர்களால் அதை குல்தீப்புக்கு எதிராக செய்ய முடியாது”
“அவர் இங்கிலாந்துக்கு எதிராக உங்களுடைய மர்மமான பவுலராக இருப்பார். அவருக்காக நீங்கள் உங்களுடைய அணியில் ஒரு பேட்ஸ்மேனை குறைத்துக் கொள்ளுங்கள். என்னைக் கேட்டால் நான் நிதிஷ் ரெட்டியை நீக்கி விட்டு அவரை அணிக்குள் கொண்டு வருவேன். அதே போல சாய் சுதர்சனை நான் தொடர்ந்து விளையாட வைத்திருப்பேன். வெறும் ஒரு போட்டியுடன் நீங்கள் அவரை தூக்கி எறியக்கூடாது”
ஹர்பஜன் ஆதரவு:
“கருண் நாயருக்கு பதிலாக நீங்கள் அவருக்கு 3வது இடத்தில் விளையாடும் வாய்ப்பைக் கொடுக்க வேண்டும். அவருக்கு குறைந்தது 3 போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும். ஆனால் நீங்கள் கருண் நாயரை நீக்கி விட்டு அவருக்கு வாய்ப்பு கொடுத்தீர்கள். தற்போது சிறப்பாக விளையாடாததால் அடுத்தப் போட்டியில் கருண் நாயரை நீக்கலாமா என்ற பேச்சுக்கள் காற்றில் காணப்படுகின்றன”
இதையும் படிங்க: இந்திய அணிக்கு திரும்பும் முனைப்புடன் முக்கிய முடிவை கையிலெடுத்த முகமது ஷமி – விவரம் இதோ
“இது ஒரு வீரரின் போக்கை உடைக்கக் கூடியது அல்லவா?” என்று கூறினார். இதற்கிடையே மான்செஸ்டர் நகரில் இருக்கும் ஓல்ட் ட்ராஃபோர்ட் மைதானத்தில் வரலாற்றில் ஒரு முறை கூட டெஸ்ட் கிரிக்கெட்டில் வென்றதில்லை என்பது இந்திய அணிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. அந்த மோசமான வரலாற்றை இம்முறை சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி தடைகளை உடைத்து மாற்றி எழுதுமா என்பதைப் பார்ப்போம்.



