ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா விளையாடும் 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் பெர்த் நகரில் துவங்குகிறது. அந்தத் தொடரில் 4 போட்டிகளை வென்று 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு இந்தியா தகுதி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. ஏனெனில் சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்தது.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் ரோஹித் சர்மா தன்னுடைய சொந்த காரணத்திற்காக முதல் போட்டியில் விளையாட மாட்டார் என்ற செய்திகள் காணப்படுகின்றன. அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் ஜஸ்ப்ரித் பும்ரா இந்திய அணியை வழி நடத்துவர் என்று பயிற்சியாளர் கௌதம் கம்பீர் சமீபத்தில் கூறியிருந்தார். ஆனால் அது போன்ற சூழ்நிலையில் 5 போட்டிகளிலும் பும்ரா இந்தியாவை வழி நடத்த வேண்டும் என்று சமீபத்தில் சுனில் கவாஸ்கர் கூறியிருந்தார்.
கவாஸ்கர் ஐடியா:
மேலும் ரோகித் சர்மா சாதாரண வீரராக இரண்டாவது போட்டியிலிருந்து இணைந்து இந்தியாவுக்காக விளையாடலாம் என்றும் அவர் கூறியிருந்தார். ஏனெனில் சமீபத்தில் நியூசிலாந்திடம் மோசமான தோல்வியை சந்தித்ததால் ஆஸ்திரேலியாவில் ஒரு கேப்டன் முழுமையாக இந்தியாவை வழி நடத்துவது அவசியம் என்று கவாஸ்கர் கூறியிருந்தார். இந்நிலையில் கவாஸ்கர் சொல்வது சரியான ஆலோசனை என்று மற்றொரு முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
அது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஒருவேளை நீங்கள் முதல் 2 போட்டிகளில் வென்றால் பின்னர் அனைத்து இந்தியர்களும் பும்ரா கேப்டனாக தொடர்வதையே விரும்புவார்கள். அதே சமயம் முதல் 2 போட்டிகளில் இந்தியா தோல்வியை சந்தித்தால் ரோஹித் சர்மா மீண்டும் கேப்டனாக செயல்படுவதை மக்கள் விரும்புவார்கள். அந்த வகையில் நாம் மாற்றங்களை வேகமாக செய்வோம்”
ஹர்பஜன் ஆதரவு:
“சுனில் கவாஸ்கர் சார் சொன்னதைப் பற்றி நான் இங்கே பேசவில்லை. பொதுமக்களில் நானும் ஒருவனாக இதை பேசுகிறேன். நம்முடைய இந்திய அணிக்கு மொத்த தொடரிலும் ஒரே கேப்டன் செயல்படுவது முக்கியம் என்பது நல்ல பரிந்துரை. ஒருவேளை இந்தியா தோற்றால் யாரும் அதைப் பற்றி கேட்க மாட்டார்கள்”
இதையும் படிங்க: ரோஹித், கில் சந்தேகம்.. ஆஸியில் விராட் கோலியை 4க்கு பதில் அந்த இடத்தில் களமிறக்கலாம்.. கீர்த்தி ஆசாத்
“ஆனால் ஒருவேளை முதல் 2 போட்டிகளில் இந்தியா வென்று பின்னர் ரோஹித் சர்மா வந்து அவருடைய தலைமையில் நாம் தோற்றால் மிகப்பெரிய விமர்சனங்கள் ஏற்படும். அதே சமயம் ரோஹித், பும்ரா ஆகியோர் இருவரது தலைமையிலும் இந்தியா தோற்றால் மக்கள் விராட் கோலியை கேப்டனாக விரும்புவார்கள். எனவே பும்ரா முழுமையாக கேப்டனாக செயல்பட வைப்பது மோசமான ஐடியாவாக இருக்காது. நம்முடைய அணியில் பிரச்சனைகள் இருக்கக் கூடாது. பும்ராவால் நம்முடைய அணியை வழி நடத்த முடியும்” என்று கூறினார்.



