ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை வென்று ஜிம்பாப்வே தொடரையும் கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் இந்தியா விளையாட உள்ளது. அந்தத் தொடர்களுக்கான இந்திய அணியை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.
முதலில் 2022க்குப்பின் ரோஹித் சர்மா ஓய்வெடுத்த காலங்களில் ஹர்திக் பாண்டியா இந்தியா விளையாடிய பெரும்பாலான டி20 தொடர்களில் கேப்டனாக செயல்பட்டு வந்தார். அத்துடன் 2024 டி20 உலகக் கோப்பையிலும் துணை கேப்டனாக செயல்பட்ட அவர் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அதனால் மும்பை ஐபிஎல் அணியை போலவே ரோஹித்துக்குப் பின் பாண்டியா புதிய டி20 கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஹர்பஜன் கேள்வி:
ஆனால் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள கௌதம் கம்பீர் அவரை துணைக் கேப்டனாக கூட நியமிக்காமல் சூரியகுமாரை புதிய கேப்டனாக நியமிக்க வைத்துள்ளார். அதை விட ஜிம்பாப்வே தொடரில் அறிமுகமாகி சதமடித்த அபிஷேக் ஷர்மாவுக்கு கேப்டனாக சுப்மன் கில் தன்னுடைய ஒப்பனிங் கொடுக்கவில்லை. மேலும் 4வது போட்டியில் ஜெய்ஸ்வாலை சதமடிக்க விடாத அவர் தம்முடைய அரை சதத்தை பூர்த்தி செய்து கொண்டார்.
அப்படி சுயநலமாக நடந்து கொண்ட அவர் 2 இலங்கை தொடர்களின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் ஜிம்பாப்வே தொடரில் சிறப்பாக விளையாடி சுப்மன் கில்லை விட நல்ல சாதனை புள்ளிவிவரங்களை வைத்துள்ள ருதுராஜ் கெய்க்வாட் இலங்கை டி20 தொடரில் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அதே போல ஜிம்பாப்வே தொடரில் 24 ரன்கள் மட்டுமே எடுத்து சொதப்பிய ரியான் பராக் 2 இலங்கை தொடர்களிலும் விளையாடத் தேர்வாகியுள்ளார்.
மறுபுறம் சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்த அபிஷேக் ஷர்மாவுக்கு பெஞ்சில் அமரும் வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. இந்நிலையில் தனது கடைசி போட்டியில் சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்த சஞ்சு சாம்சனுக்கு இலங்கை ஒருநாள் தொடரில் வாய்ப்பு கிடைக்காததை புரிந்து கொள்ள முடியவில்லை என ஹர்பஜன் சிங் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: இந்திய அணியை கூண்டோடு கொல்கத்தா, லக்னோவாக மாற்றும் கம்பீர்.. பயிற்சியாளர் குழுவில் சாதகமாக 3 பேர்
அத்துடன் அபிஷேக் ஷர்மா, 2024 டி20 உலகக் கோப்பை அணியில் தேர்வாகியிருந்த சஹால் ஆகியோரை கழற்றி விட்டது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது பற்றி ட்விட்டரில் கம்பீரிடம் அவர் அறிமுகமாக கேள்வி எழுப்பியுள்ளது பின்வருமாறு “யுஸ்வேந்திர சஹால், அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோர் இலங்கை தொடருக்கான இந்திய அணியில் ஏன் இடம் பிடிக்கவில்லை? என்பதை புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.



