
ஐ.பி.எல் கிரிக்கெட் வரலாற்றில் ஜாம்பவான் அணிகளில் ஒன்றாக திகழும் மும்பை இந்தியன்ஸ் அணியானது ஐந்து முறை கோப்பையை வென்று அதிகமுறை சாம்பியன் பட்டத்தை வென்ற அணியாக சி.எஸ்.கே அணியுடன் முதலிடத்தில் இருக்கிறது. ஐபிஎல் ஆரம்பகட்டத்தில் இருந்து பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்படும் மும்பை இந்தியன்ஸ் அணியானது கடந்த சில ஆண்டுகளாகவே மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக ரோஹித் சர்மா மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு பிறகு மும்பை அணி தொடர் சரிவை சந்தித்து வருவது ரசிகர்கள் மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹார்டிக் பாண்டியா தலைமையில் கடந்த சில ஆண்டுகளாகவே விளையாடி வரும் மும்பை இந்தியன்ஸ் அணியானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் தொடரில் இரண்டாவது அணியாக பிளே ஆப் சுற்றிற்கான வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளது. இதுவரை தாங்கள் விளையாடியுள்ள 11 போட்டிகளில் 8 தோல்விகளை பெற்றுள்ள மும்பை அணி 3 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது.
அதனால் இனிவரும் போட்டிகளில் வெற்றி பெற்றால் கூட பிளே ஆப் வாய்ப்பு கிடைக்காது. இதன் காரணமாக லக்னோ அணியுடன் சேர்ந்து இந்த நடப்பு 2026 ஐ.பி.எல் தொடரின் பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ளது. இந்நிலையில் மும்பை அணி இப்படி மோசமான சரிவை சந்திக்க என்ன காரணம்? என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : மும்பை அணியில் நான் பத்து ஆண்டுகள் விளையாடி இருக்கிறேன். அப்போதெல்லாம் 5 போட்டிகளில் நாங்கள் தோற்றால் கூட அதிலிருந்து மீண்டுவர முடியும் என்கிற நம்பிக்கை எங்களிடம் இருந்தது. அதோடு தன்னம்பிக்கையுடன் இருக்கும் உடல் மொழியும் எங்களிடம் இருந்தது. ஆனால் தற்போது விளையாடி வரும் மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடர் தோல்விகளால் வீரர்கள் துவண்டு போய் உள்ளனர்.
இதையும் படிங்க : 2026 ஐ.பி.எல் தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற சி.எஸ்.கே அணிக்கு இன்னும் – எத்தனை வெற்றிகள் தேவை?
அதோடு போராடும் குணம் இல்லாமல் அவர்களது உடல் மொழியே தோல்வியை சந்திப்பது போன்று தான் இருக்கிறது. அதேபோன்று முன்னர் எல்லாம் மும்பை அணியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் தரமான உள்ளூர் வீரர்கள் இருந்தனர் அது பெரிய பலமாக இருந்தது. ஆனால் தற்போதைய மும்பை அணியில் நல்ல இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் யாரும் இல்லை அதுவும் ஒரு பெரிய வித்தியாசம் தான் என ஹர்பஜன் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.