இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இருதரப்பு கிரிக்கெட் தொடரானது கடைசியாக கடந்த 2008-ஆம் ஆண்டு நடைபெற்றது. அதன் பிறகு ஏற்பட்ட சில அரசியல் சூழல் காரணமாக கடந்த பல ஆண்டுகளாக இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான இருதரப்பு தொடர்களில் விளையாடுவது கிடையாது.
அதேபோன்று ஐசிசி தொடர்கள் நடைபெறும் போது மட்டும் பொதுவான இடங்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும். அது தவிர்த்து தனிப்பட்ட முறையில் இந்திய அணி பாகிஸ்தான் நாட்டிற்கோ பாகிஸ்தான அணி இந்தியா வருவதோ கிடையாது.
இருந்தாலும் கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் போது பாகிஸ்தான் அணி இந்தியா வந்து விளையாடி இருந்தது. இந்நிலையில் எதிர்வரும் 2025-ஆம் ஆண்டு சாம்பியன் டிராபி தொடரானது பாகிஸ்தானில் நடைபெற இருப்பதினால் இந்திய அணி அங்கு வந்து விளையாட வேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் என்ன நடந்தாலும் அடுத்த ஆண்டு இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல அனுமதிக்க மாட்டோம் என இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் சில கருத்துக்களை நேரலையில் காட்டமாக பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :
இந்திய வீரர்கள் பாதுகாப்பை உறுதி செய்யாவிட்டால் எங்களது அணியை அனுப்ப மாட்டோம். பாகிஸ்தானில் எங்கள் வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் நிச்சயமாக இந்திய அணி அங்கு செல்லாது. நாங்கள் இல்லாமல் நீங்கள் விளையாட விரும்பினால் அந்த தொடரை நடத்திக் கொள்ளுங்கள். அதனால் இந்திய கிரிக்கெட்டுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று கூறினார்.
இதையும் படிங்க : ஒரே பந்தில் 13 ரன்ஸ்.. மாபெரும் சாதனை படைத்த ஜெய்ஸ்வால்.. பாகிஸ்தானை மிஞ்சி இந்தியா உலக சாதனை
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போது இந்திய அணி மோதும் போட்டிகளை மட்டும் இலங்கை நாட்டிற்கோ அல்லது துபாய் நாட்டிற்கோ மாற்றுமாறு இந்திய கிரிக்கெட் நிர்வாகமான் பிசிசிஐ ஏற்கனவே ஐ.சி.சி-யிடம் கோரிக்கை வைக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



