சென்னை சூப்பர்கிங்ஸ் அணி வீரர் ஹர்பஜன்சிங் பயிற்சியின் இடையே பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார்.இந்த ஆண்டின் 11வது ஐபிஎல் சீசன் தொடங்க இன்னும் இருதினங்களே உள்ளன. வரும் சனிக்கிழமை முதல் அனைவரும் மிகவும் எதிர்பார்த்த ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கப்படவுள்ளது.
8 அணிகள் கலந்துகொள்ளும் இந்த ஐபிஎல் போட்டிகளானது ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில் தொடக்க மற்றும் இறுதிப் போட்டியை மும்பையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 7ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கப்படவுள்ள முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பலப்பரிட்சை நடத்தவுள்ளன.
இந்நிலையில் தற்போது அனைத்து அணிகளும் தீவிர இறுதிகட்ட பயிற்சியில் ஈடுபட்டு வருகின்னறனர்.ஹர்பஜன்சிங் கடந்த 10ஐபிஎல் சீசனிலும் மும்பை அணிக்காக விளையாடியவர். இம்முறை முதன்முறையாக சென்னை அணி அவரை ஏலத்தில் எடுத்தது. இந்நிலையில் தீவிர பயிற்சிக்கு இடையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய ஹர்பஜன்சிங் “மும்பை வான்கடே மைதானம் என் தாய் மைதானம் போன்றது. கடந்த பத்தாண்டுகளில் பல போட்டிகளில் அங்கு மும்பை அணிக்காக விளையாடிவுள்ளேன்.
இந்த ஐபிஎல்-இல் முதன்முறையாக மும்பை அணிக்கு எதிராக முதல் போட்டியில் அதே வான்கடே மைதானத்தில் களமிறங்கப்போவது கொஞ்சம் உணர்ச்சிப் பூர்வமானது தான்.ஆனால் சென்னை அணியின் வீரராக நான் எங்கள் அணி வெற்றிபெற விளையாட்டில் கவனம் செலுத்தி விளையாடுவேன்.
மும்பை அணியை வெற்றி பெறுவது என்பது தற்போதைய நிலையில் மிகமுக்கியமான ஒன்று. மும்பை அணியை வெல்லும் அளவிற்கு எங்களிடம் திறமையான வீரர்கள் இருக்கின்றார்கள் என்றார். மேலும் நீண்ட ஆண்டுகளாக மும்பை அணிக்காக விளையாடியிருப்பதால் அந்த அணியின் ரகசியங்கள் பற்றி எனக்கு நன்றாக தெரியும் என்றார்.