கடந்த 12 ஆண்டுகளாக இந்திய மண்ணில் எந்த ஒரு டெஸ்ட் தொடரையும் இழக்காத இந்திய கிரிக்கெட் அணியானது நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்து அந்த வெற்றிப் பயணத்தை முடித்துக் கொண்டது. இந்த மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களிலும் இந்திய அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே தொடரை இழந்துள்ள இந்திய அணி ஆறுதல் வெற்றிக்காக மூன்றாவது டெஸ்ட் போட்டியை எதிர்நோக்கி காத்திருக்கிறது.
இந்திய அணியின் சரிவிற்கு இதுதான் காரணம் :
இந்நிலையில் இந்த தொடரின் 2 போட்டிகளிலும் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன்களை குவிக்காததே தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக இந்திய அணியின் பேட்டிங் வரிசையின் மீதும் விமர்சனம் எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்திய பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்காமல் திணறுவதற்கு முக்கிய காரணமே சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை அமைப்பது தான் என இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் என்ன நடக்கிறது?
சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை அமைத்துவிட்டு முதலில் டாஸ் வென்று நாம் பேட்டிங் செய்து 300 ரன்கள் அடித்தாலே போதும் என்ற மனநிலையோடு மைதானத்தை தயார் செய்து வருகிறோம். ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது? மோசமான பிட்ச்களில் நாம் எப்படி பேட்டிங் செய்கிறோம்? என்பது நமது பேட்ஸ்மேன்களுக்கு தெரிவதில்லை. கடினமான ஆடுகளங்களில் விளையாடும் போது பந்து எப்படி வரும் என்று தெரியாமல் நமது பேட்ஸ்மேன்கள் நம்பிக்கை இழந்து விடுகிறார்கள்.
அதற்கு மிகப்பெரிய உதாரணம் ரஹானே தான். மிகச் சிறப்பான வீரரான அவர் வெளிநாடுகளில் அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தினாலும் நமது மண்ணில் பெரிய அளவில் விளையாட முடியாமல் அவர் கேரியர் பாதிக்கப்பட்டிருக்கிறது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்க சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இங்கு விளையாடும் போது பெரிய அளவில் ரன்களை குவிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
இதையும் படிங்க : இதைமட்டும் செய்ஞ்சா போதும்.. ஆஸ்திரேலிய தொடரில் முகமது ஷமி இடம்பிடிக்க வாய்ப்பு – விவரம் இதோ
எனவே இனி முற்றிலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை அமைக்காமல் சுழற்சி முறையில் பல்வேறு வகையான பிட்ச்களை பயன்படுத்த வேண்டும் என ஹர்பஜன் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.



