
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தங்களது சொந்த ஊரில் 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற தென் ஆப்பிரிக்கா 1 – 0* என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. கொல்கத்தாவில் நடைபெற்ற அப்போட்டியில் சுழலுக்கு சாதகமாக இருந்த பிட்ச்சில் இரு அணிகளுமே பேட்டிங் செய்வதற்கு திண்டாடின.
அந்த திண்டாட்டத்துக்கு மத்தியில் 2வது இன்னிங்ஸில் மோசமாக பேட்டிங் செய்த இந்தியாவை 30 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த தென்னாப்பிரிக்கா தங்களை டெஸ்ட் சாம்பியன் என்பதை நிரூபித்தது. அத்துடன் 15 வருடங்கள் கழித்து இந்தியாவில் ஒரு டெஸ்ட் போட்டியில் வென்று தென்னாப்பிரிக்கா சாதனை படைத்துள்ளது. மறுபுறம் கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 3 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா வரலாறு காணாத ஒயிட்வாஸ் தோல்வியை சந்தித்தது.
அந்த தோல்வியிலிருந்து எந்தப் பாடத்தையும் கற்காத இந்தியா மீண்டும் தென்னாப்பிரிக்காவிடம் மண்ணைக் கவ்வியுள்ளது என்றே சொல்லலாம். ஏனெனில் சுழலுக்கு சாதகமான பிட்ச்கள் அமைத்தது நியூசிலாந்திடம் தோற்க முக்கிய காரணமானது. தற்போது கொல்கத்தாவில் தென் ஆப்பிரிக்காவிடம் 15 வருடங்கள் கழித்து இந்தியா தோற்க சுழலுக்கு சாதகமான ஆடுகளமே காரணமாகியுள்ளது.
இந்நிலையில் இது போன்ற பிட்ச்சில் சச்சின் டெண்டுல்கருக்கு வந்தால் கூட இந்தியாவை வெற்றி பெற வைக்க முடியாது என்று ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார். இது பற்றி பயிற்சியாளர் கௌதம் கம்பீரை அவர் மறைமுகமாக விமர்சித்து பேசியது பின்வருமாறு. “2 நாட்கள் நடைபெற்ற ஆட்டத்தில் போட்டி எங்கே செல்கிறது என்பதை நாம் பார்த்தோம். அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை கொல்வதற்கான வேலையை செய்துள்ளார்கள்”
“டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த மதிப்பும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. சமீபத்தில் இங்கிலாந்தில் நன்றாக விளையாடியதால் அனைவரும் இந்திய அணியை பாராட்டினார்கள். அங்கே பிட்ச்கள் நன்றாக இருந்த காரணத்தாலேயே இந்தியா போராடி வென்றது. ஆனால் இங்கே பந்தை போட்டால் அது எங்கேயோ சுழன்று செல்லும் அளவுக்கு பிட்ச் தரமற்றதாக இருக்கிறது”
இதையும் படிங்க: இந்த மாச கடைசியில் எனக்கு லீவ் வேணும்.. பி.சி.சி.ஐ-யிடம் வேண்டுகோள் வைத்த குல்தீப் யாதவ் – எல்லாம் நல்ல செய்தி தான்
“அதை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது பேட்ஸ்மேன்களுக்கு எளிதாக தெரியவில்லை. இப்படிப்பட்ட பிட்ச்களில் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலியால் கூட தாக்குப்பிடிக்க முடியாது. ஏனெனில் ஒரு பந்து கீழே வருகிறது. மற்றொன்று எழும்பி அல்லது திரும்பி வந்து உங்களது விக்கெட்டை பறிக்கிறது. இது போன்ற பிட்ச்களில் எந்த டெக்னிக்கை வைத்தும் உங்களால் விளையாட முடியாது” என்று கூறினார்.