பாகிஸ்தானில் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. அந்தத் தொடரில் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட விரும்பாத இந்தியா தங்களுடைய போட்டிகளை துபாயில் நடத்துமாறு ஐசிசிக்கு கோரிக்கை வைத்துள்ளது. ஏனெனில் 2008க்குப்பின் எல்லை பிரச்சினை காரணமாக அந்நாட்டுக்கு சென்று விளையாடுவதை நிறுத்தியுள்ள இந்தியா தங்களின் 2023 ஆசிய கோப்பை போட்டிகளை இலங்கையில் விளையாடி வெற்றி கண்டது.
மறுபுறம் இந்தியா விளையாடாமல் போனால் பாகிஸ்தானுக்கு போதுமான ஸ்பான்சர்சிப் வருமானங்கள் கிடைக்காது. அதன் காரணமாக இந்திய அணியை எப்படியாவது பாகிஸ்தானில் விளையாட வைக்க அந்நாட்டு வாரியம் போராடி வருகிறது. ஆனால் இந்தியா அதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்பதால் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை ஹைபிரிட் மாடலில் நடத்த பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்துள்ளதாக புதிய செய்திகள் தெரிவிக்கிறது.
ஹர்பஜன் பதிலடி:
அதே சமயம் இந்தியாவில் வரும் காலங்களில் நடைபெறும் ஐசிசி தொடர்களில் தாங்கள் விளையாட மாட்டோம் என்றும் பாகிஸ்தான் கூறிவிட்டதாக செய்திகள் காணப்படுகிறது. மாறாக இந்தியாவில் நடைபெறும் தொடரில் தங்களுடைய போட்டிகளை இலங்கை போன்ற அண்டை நாட்டில் விளையாடினால் மட்டுமே பங்கேற்போம் என்று பாகிஸ்தான் வாரியம் ஐசிசியிடம் கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் கொடுத்த பதிலடி பின்வருமாறு.
“அனைத்து வீரர்களிடமும் கேளுங்கள். அவர்கள் துபாய் அல்லது அபுதாபியில் விளையாட தயாராக இருக்கிறோம் என்று சொல்வார்கள். பாகிஸ்தான் தங்களுடைய ஈகோவை விட்டுவிட்டு ஹைபிரிட் மாடலில் விளையாட ஒப்புக்கொள்ள வேண்டும். ஏனெனில் அங்கு இந்தியாவுக்கு பாதுகாப்பு பிரச்சனை இருக்கிறது என்பதை 2022 முதல் சொல்லி வருகிறேன். இந்தியாவுக்கு வர விரும்பவில்லையெனில் வராதீர்கள்”
இந்தியா – பாகிஸ்தான்:
“எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வரவில்லையெனில் அது பெரிய பிரச்சனை கிடையாது. தற்போதைய கிரிக்கெட் வீரர்களிடமும் நீங்கள் கேளுங்கள். அவர்களும் இதே கருத்தை சொல்வார்கள். நான் பாகிஸ்தானில் விளையாடிய போது அங்கே அனைத்தும் சிறப்பாக இருந்தன. அவர்கள் எங்களுடைய உணவுக்கு பணம் வாங்கவில்லை. அங்குள்ளவர்கள் எங்களுக்கு அன்பு பரிசுகளையும் கொடுத்தார்கள்”
இதையும் படிங்க: இதை மட்டும் பண்ணுங்க விக்கெட் விழும்னு பும்ரா என்கிட்ட வந்து சொன்னாரு – முகமது சிராஜ் பகிர்வு
“அதே சமயம் விராட் கோலி போன்ற வீரர்கள் விளையாடுவதை பார்க்க முடியாததால் பாகிஸ்தான் ரசிகர்களுக்காக நான் வருந்துகிறேன். அது அவர்களுடைய தவறல்ல. அங்குள்ள நிலைமை முன்னேறும் வரை எதுவும் மாறப் போவதில்லை. பிடிவாதம் பிடிக்காமல் தொடரை நடத்த விடுங்கள். நீங்கள் விரும்பவில்லை எனில் தொடரை நடத்த இலங்கை, மலேசியா போன்ற பல நாடுகள் விருப்பத்துடன் காத்திருக்கின்றன. பாகிஸ்தானில் நிலைமை சீராகும் வரை இந்தியா செல்லாது” என்று கூறினார்.



