
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்றது. மறுபுறம் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கத்துக்குட்டியான அமெரிக்காவிடம் சூப்பர் ஓவரில் தோற்று சுமாராக விளையாடி முதல் சுற்றுடன் வெளியேறியது. அதனால் அந்த அணி தற்சமயத்தில் கடுமையான கிண்டல்கள் மற்றும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
ஆனாலும் இதற்கிடையே விராட் கோலியை விட பாபர் அசாம் தான் சிறந்தவர், இந்தியாவை விட பாகிஸ்தான் சிறந்தது என்று அந்நாட்டவர்கள் பேசுவது வாடிக்கையாகி விட்டது. அந்த வரிசையில் பரிட் கான் எனும் பாகிஸ்தான் நிருபர் “எம்எஸ் தோனி அல்லது முகமது ரிஸ்வான் ஆகியோரில் யார் சிறந்தவர்? என்ற உண்மையான என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்” என ஜூலை 19ஆம் தேதி ட்விட்டரில் பதிவிட்டார்.
காமெடியான கம்பேரிசன்:
அதைப் பார்த்த முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் சில்லித்தனமாக யாரை யாருடன் ஒப்பிடுகிறீர்கள்? என்று அந்த பாகிஸ்தான் நிருபரின் மூக்கை உடைக்கும் வகையில் பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி அந்த பாகிஸ்தான் நிருபருக்கு ஹர்பஜன் ட்விட்டரில் கொடுத்த பதிலடி பின்வருமாறு. “இப்போதெல்லாம் நீங்கள் என்ன புகைக்கிறீர்கள்”
“இப்படி சில்லித்தனமான முட்டாள்தனமான கேள்வி கேட்கலாமா? தோழர்களே இவருக்கு சொல்லி புரிய வையுங்கள். ரிஸ்வானை விட தோனி பன்மடங்கு முன்னே இருக்கிறார். சொல்லப்போனால் நீங்கள் இதை முகமது ரிஸ்வானிடம் கேட்டாலும் அவர் இதே பதிலை தான் கொடுப்பார். நல்ல வீரரான முகமது ரிஸ்வானை எனக்கும் பிடிக்கும். அவர் எப்போதும் அணிக்காக உள்நோக்குத்துடன் விளையாடும் நல்ல வீரர்”
“ஆனால் இந்த ஒப்பீடு மிகவும் தவறு. எப்போதும் உலக கிரிக்கெட்டில் தோனி தான் நம்பர் ஒன். ஸ்டம்ப்களுக்கு பின்னால் அவரை விட சிறந்த விக்கெட் கீப்பர்கள் யாரும் இல்லை” என்று கூறினார். அவர் கூறுவது போல பேட்ஸ்மேன்கள் தரையில் இருந்து ஒரு இன்ச் காலை மேலே தூக்கினாலும் அந்த இடைவெளிக்குள் தோனி கண்ணிமைக்கும் நேரத்தில் மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்வதில் வல்லவர்.
இதையும் படிங்க: வீட்ல மனைவி குழந்தைங்க இருக்காங்க பாத்துகோங்க.. சவாலை கொடுத்த ஹோட்ஜ்.. மார்க் வுட் பற்றி கலகலப்பு
மேலும் கில்கிறிஸ்ட், சங்கக்காரா போன்ற ஜாம்பவான்களை விட சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஸ்டம்பிங் செய்த விக்கெட் கீப்பராகவும் தோனி உலக சாதனை படைத்துள்ளார். அத்துடன் 2016 டி20 உலகக் கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிராக கடைசி பந்தில் ஒரு கிளவுஸை கழற்றி ரன் அவுட் செய்து இந்தியாவை வெற்றி பெற வைத்த தோனி விக்கெட் கீப்பிங்கில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தியவர். அப்படிப்பட்டவரை ரிஸ்வானுடன் ஒப்பிடுவது நகைச்சுவை என்றால் மிகையாகாது.