இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 700-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த தமிழக வீரரான சாய் சுதர்சன் இந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீராராக ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினார். அதோடு மட்டுமின்றி உள்ளூர் போட்டிகளிலும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு முதல் முறையாக இந்திய டெஸ்ட் அணியிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் எதிர்வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அவர் தேர்வாகியுள்ளார்.
சாய் சுதர்சனுக்கு அந்த வாய்ப்பினை வழங்க வேண்டும் : ஹர்பஜன் சிங்
அதனைத்தொடர்ந்து தற்போது இங்கிலாந்து சென்று பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். இதன் காரணமாக எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடரில் அவருக்கு அறிமுக வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக வீரரான சாய் சுதர்சனை இந்திய அணியில் புதிய மூன்றாம் நம்பர் பேட்ஸ்மேனாக களமிறக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : என்னுடைய கருத்தின் படி சாய் சுதர்சன் இந்திய டெஸ்ட் அணியில் மூன்றாம் இடத்தில் களமிறங்க வேண்டும். ஏனெனில் இடது கை ஆட்டக்காரரான அவர் தற்போது மிகச் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். அதுமட்டுமின்றி நடைபெற்ற முடிந்த ஐபிஎல் தொடரிலும் அவர் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதால் நல்ல டச்சிலும் இருக்கிறார். டெக்னிக்கலாகவே அவர் ஒரு மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்பதை ஐ.பி.எல் தொடரில் நாம் பார்த்துள்ளோம்.
எனவே நிச்சயம் இந்திய அணியின் மூன்றாம் இடத்தில் களமிறங்கி அவரால் மிகச் சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். மேலும் ஷ்ரேயாஸ் ஐயரின் விவகாரம் குறித்து பேசியிருந்த ஹர்பஜன் சிங் கூறுகையில் : ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு மிகச் சிறப்பான வீரர். ஒருநாள் போட்டிகளில் அவருடைய திறமையை நிரூபித்துள்ளார். அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரிலும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
ஆனாலும் அவருக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைக்காமல் போயுள்ளது ஏமாற்றம்தான். தற்போதைக்கு இந்திய அணியின் தேர்வுக்குழுவினர் அவரை டெஸ்ட் வீரராக பார்க்கவில்லை என்பதனாலேயே இந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இருப்பினும் இனிவரும் காலங்களில் அவர் தனது சிறப்பான திறனை வெளிப்படுத்தி தேர்வுக்குழுவினரின் கவனத்தை ஈர்ப்பார் என்று நினைக்கிறேன்.
இதையும் படிங்க : ஷர்துல் தாகூர்.. நிதீஷ் ரெட்டி.. பிளேயிங் லெவனில் இரண்டு பேரில் யாருக்கு இடம்? – விவரம் இதோ
என்னைப் பொறுத்தவரை இந்திய டெஸ்ட் அணிக்கு ஷ்ரேயாஸ் ஐயர் தேவையான ஒரு வீரர் தான். அவரால் நீண்ட ஆண்டுகள் இந்திய அணிக்காக மிகச் சிறப்பாக விளையாட முடியும். அதுமட்டும் இன்றி எதிர்கால ஒருநாள் அணியின் கேப்டனாகவும் அவரை நான் பார்க்கிறேன் என ஹர்பஜன் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.



