முதல்ல உங்கள காப்பாத்திக்கோங்க அப்றம் நாங்க வரோம் – பாகிஸ்தானுக்கு ஹர்பஜன் சிங் ஆதாரத்துடன் பதிலடி

Harbhajan Singh.jpeg
- Advertisement -

அண்டை நாடான பாகிஸ்தானுடன் நிலவும் எல்லை பிரச்சினை காரணமாக கடந்து 10 வருடங்களாக இருதரப்பு தொடர்களில் மோதுவதை தவிர்த்து வரும் இந்தியா ஆசிய மற்றும் ஐசிசி உலகக் கோப்பைகளில் மட்டும் மோதி வருகிறது. அந்த வரிசையில் 2023ஆம் ஆண்டு ஆசிய மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பையில் இவ்விரு அணிகள் மோதுவதாக இருக்கும் போட்டிகள் நடைபெறுமா என்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் எல்லை பிரச்சனை காரணமாக இந்திய அரசின் அனுமதியின்றி வரும் ஆகஸ்ட் – செப்டம்பர் மாத வாக்கில் பாகிஸ்தானில் நடைபெறும் 2023 ஆசிய கோப்பையில் இந்தியா பங்கேற்காது என்று அறிவித்த பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அதை பொதுவான இடத்தில் நடத்துவதற்கான அழுத்தம் கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஆனால் ஆசிய கவுன்சில் தலைவராகவும் இருக்கும் நீங்கள் தங்களிடம் கேட்காமல் இவ்வாறு பேசியது ஏமாற்றத்தைக் கொடுப்பதாக தெரிவித்த பாகிஸ்தான் வாரியம் எங்கள் நாட்டுக்கு வராமல் போனால் வரும் அக்டோபர் மாதம் உங்கள் நாட்டில் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலக கோப்பையில் பங்கேற்க நாங்களும் வரமாட்டோம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதனால் கடந்த சில மாதங்களாகவே இருநாட்டுக்குமிடையே பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில் என்ன பேசினாலும் பாகிஸ்தானால் எதுவும் செய்ய முடியாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஹர்பஜன் பதிலடி:
ஏனெனில் ஆசிய கவுன்சிலில் கிடைக்கும் வருமானத்தை பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகள் பங்கு போடும் நிலையில் இந்தியா மட்டும் நிதியுதவி அளிக்கும் நாடாக இருக்கிறது. மேலும் இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பையை புறக்கணித்தால் அதற்காக ஐசிசியிடம் இருந்து கிடைக்க வேண்டிய பங்கு பணம் பாகிஸ்தானுக்கு கிடைக்காது. அத்துடன் ஐசிசிக்கு அதிக வருமானத்தை ஈட்டி தரும் இந்தியாவின் ஜெய் ஷா ஆசிய கவுன்சில் தலைவராகவும் இருப்பதால் அவர் எடுக்கும் முடிவே இந்த விவகாரத்தில் இறுதியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

முன்னதாக சமீப காலங்களில் என்ன தான் பாதுகாப்பு அம்சங்களை உயர்த்தி நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற அணிகளை வரவழைத்து வெற்றிகரமாக சர்வதேச போட்டிகளை மீண்டும் தங்களது சொந்த நாட்டில் பாகிஸ்தான் நடத்த துவங்கினாலும் இன்னும் அங்குள்ள பாதுகாப்பு சூழ்நிலைகள் திருப்தியளிக்காத காரணத்தாலேயே இந்தியா வரமுடியாது முடியாது என்று தெரிவித்து வருகிறது. இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் 2023 பிஎஸ்எல் தொடருக்கு ரசிகர்களை கவரும் வகையில் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதியன்று அக்பர் புக்தி மைதானத்தில் கண்காட்சி போட்டி நடைபெற்றது.

- Advertisement -

ஆனால் அப்போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே அருகில் அசம்பாவிதமான நிகழ்வு நடந்ததால் உடனடியாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டு சாகித் அப்ரிடி, பாபர் அசாம் உள்ளிட்ட வீரர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்பட்டனர். அது பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது நடைபெற்று வரும் பிஎஸ்எல் தொடரில் கராச்சி மைதானத்தில் நடைபெற்ற ஒரு போட்டியின் போது மைதானத்திற்கு அருகிலேயே மற்றுமொரு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை கொடுக்கும் நிகழ்வு நடந்தது.

மொத்தத்தில் பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கே பாதுகாப்பு இல்லாமல் பிஎஸ்எல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் ஆசிய கோப்பையில் வெளிநாட்டு அணிகள் பங்கேற்பது அசாத்தியமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. அதனால் முதலில் பாதுகாப்பு அம்சங்களை உயர்த்தி உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள் பின்னர் எங்களை அழைப்பது பற்றி பேசுங்கள் என்ற வகையில் பாகிஸ்தானுக்கு முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க:ரவி சாஸ்திரியோட கோச்சிங் ஸ்டைல் இதுதான். நம்மள பைத்தியமாக்கிடுவாரு – மனம்திறந்த இஷாந்த் சர்மா

“பிசிசிஐ தற்போது எடுத்துள்ள முடிவு மிகவும் சரியானது என்று நினைக்கிறேன். நம்முடைய இந்திய அணியை நிச்சயமாக பாகிஸ்தானுக்கு அனுப்பக்கூடாது. ஏனெனில் சமீபத்தில் கூட கராச்சி மைதானத்திற்கு மிகவும் அருகில் ஒரு அசம்பாவிதமான நிகழ்வு நடைபெற்றது. எனவே எந்த நேரத்திலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பது போன்ற சூழ்நிலை கொண்ட நாட்டுக்கு நமது அணியை அனுப்ப முடியாது. வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லாத எந்த சூழ்நிலையிலும் கிரிக்கெட் போட்டிகளை நடத்த அனுமதிக்க கூடாது” என்று கூறினார்.

Advertisement