
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பெர்த் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது 295 ரன்கள் என்கிற மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி இந்த தொடரின் ஆரம்பத்திலேயே ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதன் காரணமாக நிச்சயம் அடிலெய்டு நகரில் நடைபெற்ற இரண்டாவது பகலிரவு டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியின் கையே ஓங்கி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மீண்டும் அணிக்கு திரும்பியிருந்த ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி :
அடிலெய்டு போட்டியில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி ஆஸ்திரேலிய அணியிடம் படுதோல்வியை சந்தித்து தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் சிக்கலாக்கியுள்ளது. இதன் காரணமாக எதிர்வரும் மூன்றாவது போட்டியானது இந்திய அணிக்கு மிக முக்கியமான போட்டியாக மாறியுள்ளது.
இந்நிலையில் டிசம்பர் 14ஆம் தேதி பிரிஸ்பேனில் துவங்கும் இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் மூன்று முக்கிய முடிவுகளை இந்திய அணி எடுத்தாக வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர்தான் துவக்க வீரர்களாக களமிறங்க வேண்டும்.
ஏனெனில் தற்போது ரோகித் சர்மா ஃபார்மில் இல்லை. எனவே ஃபார்மில் இல்லாத அவரை துவக்க வீரராக களமிறக்குவதை விட கே.எல் ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் தான் துவக்க வீரர்களாக களமிறங்குவது சரியான முடிவு. அதேபோன்று ரோகித் மிடில் ஆர்டரில் விளையாடுவதும் இந்திய அணிக்கு நல்லது தான் என்று கூறியுள்ளார். அடுத்ததாக வேகப்பந்து வீச்சாளரான ஹரிஷித் ராணாவை நீக்கிவிட்டு பிரசித் கிருஷ்ணாவை சேர்க்குமாறும் ஹர்பஜன் சிங் குறிப்பிட்டுள்ளார்.
ஏனெனில் ஹர்ஷித் ராணாவை விட பிரசித் கிருஷ்ணா உயரம் அதிகம் உடையவர் என்பதனால் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆஸ்திரேலியா மைதானங்களில் அவரது உயரம் இன்னும் பந்தில் கூடுதல் வேகத்தையும், பவுன்சையும் வெளிக்கொணர உதவும் என்பதனால் பிரசித் கிருஷ்ணாவை விளையாட வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதேபோன்று மூன்றாவது முக்கிய மாற்றமாக தமிழக ஆல்ரவுண்டான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தரை சேர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : 3ஆவது டெஸ்ட் போட்டி துவங்கும் முன்னரே அற்புதத்தை நிகழ்த்தியுள்ள இந்தியா ஆஸதிரேலியா 4-ஆவது டெஸ்ட்
ஏனெனில் அஸ்வினை விட வாஷிங்டன் சுந்தர் பேட்டிங்கில் ஓரளவு கை கொடுப்பதாகவும் அதுமட்டுமின்றி முதல் போட்டியில் அவர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்ததாலும் நிச்சயம் ஆஸ்திரேலியா மண்ணில் வாஷிங்டன் சுந்தரால் சோபிக்க முடியும் என்பதனால் அவரை சேர்க்க வேண்டும் என்றும் இந்த மூன்று முக்கிய முடிவுகளை இந்திய அணி எடுக்க வேண்டும் என ஹர்பஜன் சிங் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.