வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த இந்தியா அடுத்ததாக அயர்லாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் களமிறங்குகிறது. அதில் 2023 ஆசிய மற்றும் உலக கோப்பையில் களமிறங்குவதற்காக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற சீனியர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் சீனியர்கள் இல்லாமல் களமிறங்கிய இளம் இந்திய அணி முதலிரண்டு போட்டிகளில் தோற்றாலும் அதற்கடுத்த 2 போட்டிகளில் வென்று பதிலடி கொடுத்தது. ஆனால் கடைசிப் போட்டியில் தோற்றதால் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா தலைகுனியும் தோல்வியை சந்தித்தது.
அதை விட 2023 உலகக் கோப்பைக்கு தகுதி பெறாமல் தற்சமயத்தில் பலவீனமாக இருக்கும் வெஸ்ட் இண்டீஸிடம் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியா அவமான தோல்வியை சந்தித்தது அனைவரையும் அதிருப்தியில் ஆழ்த்தியது. குறிப்பாக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இந்திய அணியின் தரம் குறைந்து விட்டதாக விமர்சித்த முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் உலகம்கோப்பைக்கு தகுதி பெறாத வெஸ்ட் இண்டீஸிடம் தோற்றது ஏமாற்றமளிப்பதாக கடுமையாக விமர்சித்தார்.
ஹர்பஜன் அணி:
இருப்பினும் தரமான இடது கை பேட்ஸ்மேன்கள் இல்லாத குறையை போக்கும் அளவுக்கு திலக் வர்மா, ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்கள் கிடைத்ததையும் பாருங்கள் என ரவிச்சந்திரன் அஸ்வின் விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்தார். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தோல்வி ஏமாற்றத்தை கொடுத்தாலும் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் காலத்திற்கும் விளையாட முடியாது என்பதை புரிந்து கொண்டு இளம் வீரர்களுக்கு ஆதரவு கொடுப்பது நமது கடமை என முன்னாள் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆசிய கோப்பையில் களமிறங்கும் தம்முடைய 15 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வு செய்துள்ள அவர் காயத்திலிருந்து குணமடையாத ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரை கழற்றி விட்டுள்ளார். அதே சமயம் கேஎல் ராகுலை விக்கெட் கீப்பராக தேர்ந்தெடுத்துள்ள அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “அந்த தொடரை இந்தியா எளிதாக வெல்லும் என்று நினைத்தேன். இருப்பினும் அத்தொடரின் முடிவு எனக்கு நம்ப முடியாததாகவும் கவலையை ஏற்படுத்துவதாகவும் அமைந்தது”
“குறிப்பாக உலக கோப்பைக்கு தகுதி பெறாத வெஸ்ட் இண்டீஸ் நம்மை தோற்கடித்ததே என்ற ஆதங்கம் ஏற்பட்டது. எனவே இந்த வெற்றி வெஸ்ட் இண்டீஸை பொறுத்த வரை மிகப் பெரியது. ஆனால் இந்தியாவை பொறுத்த வரை கவலையளிக்கக் கூடியதாகும். இருப்பினும் அத்தொடரில் இடம் பெறாத விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் காலத்திற்கும் விளையாடப் போவதில்லை. எனவே இந்த வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இடம் வகித்த இளம் வீரர்கள் நிறையவற்றை கற்றிருப்பார்கள்”
“ஏற்கனவே நான் சொன்னது போல இப்போதும் இந்தியாவால் ஒரே சமயத்தில் 2 – 3 அணிகளை உருவாக்கி வெற்றிகரமாக செயல்பட முடியும். எனவே வரும் காலங்களில் நம்முடைய இளம் அணி சிறப்பாக செயல்படும் என்று நம்புவோம். இந்த ஆசிய கோப்பை நடைபெறும் இலங்கை பேட்ஸ்மேன்களுக்கும் ஸ்பின்னர்களுக்கும் சாதகமாக இருக்கும். அதனால் ரவீந்திர ஜடேஜா மற்றும் சஹால் ஆகியோர் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஒருவேளை அங்குள்ள மைதானங்கள் முழுவதுமாக ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருந்தால் குல்தீப் யாதவும் இருப்பார்”
“அத்துடன் தற்போது குணமடைந்துள்ள ராகுல் களமிறங்குவதற்கு இதுவே சரியான தருணமாகும். உலக கோப்பைக்கு முன்பாக இத்தொடரில் தேர்வு செய்து அவர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதை பார்க்க வேண்டும். மேலும் இந்த ஆசிய கோப்பை அணி உலகக்கோப்பையில் களமிறங்கும் இறுதி அணியாகவும் இருக்கும் என்பதால் பெரிய அளவில் மாற்றங்களை செய்யக்கூடாது” என்று கூறினார்.
இதையும் படிங்க:லிஸ்ட்ல பாகிஸ்தான் இல்ல, 2023 உ.கோ செமி ஃபைனலில் விளையாடப் போகும் 4 அணிகள் இது தான் – ஏபிடி அசத்தல் கணிப்பு இதோ
ஹர்பஜன் சிங்கின் ஆசிய கோப்பை இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, திலக் வர்மா, சூரியகுமார் யாதவ், இசான் கிசான், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி, முகமது சிராஜ், சர்துல் தாக்கூர், கேஎல் ராகுல், சஹால், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், அக்சர் படேல் (16வது வீரர்)