லிஸ்ட்ல பாகிஸ்தான் இல்ல, 2023 உ.கோ செமி ஃபைனலில் விளையாடப் போகும் 4 அணிகள் இது தான் – ஏபிடி அசத்தல் கணிப்பு இதோ

AB De Villiers
- Advertisement -

உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி 2023 உலக கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக துவங்குகிறது. வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் இத்தொடரில் வலுவான அணியாக திகழும் இந்தியா 2011 போல கோப்பையை வென்று 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இருப்பினும் அதற்கு வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அடித்து நொறுக்கும் அணியாக திகழும் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஏற்கனவே 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக ஜொலிக்கும் ஆஸ்திரேலியா போன்ற அணிகள் இந்தியாவுக்கு சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

IND-vs-PAK

- Advertisement -

அதே போல காலம் காலமாக ஐசிசி தொடர்களில் இந்தியாவை தெறிக்க விட்டு வரும் நியூசிலாந்தும் தங்களை புறக்கணிக்கும் பரம எதரி மண்ணில் சரித்திரம் படைப்பதற்கு பாகிஸ்தானும் கோப்பை வெல்ல போராடும் என்று நம்பப்படுகிறது. அந்த வகையில் அனைவரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்தொடர் துவங்குவதற்கு இன்னும் 50 நாட்கள் கூட இல்லாத நிலையில் நிறைய முன்னாள் வீரர்கள் லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை முத்தமிட உதவும் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறப்போகும் அணிகளை கணித்து வருகிறார்கள்.

ஏபிடி கணிப்பு:
அதில் இந்தியா, இங்கிலாந்து ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் செமி ஃபைனலுக்கு வரும் என்று கிளன் மெக்ராத் மற்றும் இயன் மோர்கன் ஆகியோர் சமீபத்தில் கணித்திருந்தனர். அந்த வரிசையில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுடன் தென்னாப்பிரிக்காவும் செமி ஃபைனலில் ஒரு அணியாக இருக்கும் என்று ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் கணித்துள்ளார். அதில் ஃபைனலில் இங்கிலாந்து தகுதி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கும் அவர் சொந்த மண்ணில் இந்தியா கோப்பையை வெல்லும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தம்முடைய பட்டியலில் பாகிஸ்தானை சேர்க்காத அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “கண்டிப்பாக இந்த உலகக் கோப்பையில் இந்தியா அங்கே சிறப்பாக விளையாடி வெல்லும் என்று நினைக்கிறேன். இந்த உலகக் கோப்பை மிகவும் சுவாரசியமான கதையாக இருக்கப் போகிறது. அதில் இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 3 மிகப்பெரிய கிரிக்கெட் அணிகள் ஆதிக்கத்தை செலுத்தலாம். அவர்களைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு நல்ல வாய்ப்பு இருந்தாலும் நான் தென்னாப்பிரிக்காவை தேர்ந்தெடுப்பேன். எனவே என்னுடைய 4வது அணி தென்னாப்பிரிக்காவாகும்”

- Advertisement -

“இந்த பட்டியலில் நான் 3 ஆசிரிய கண்டத்தை சேராத அணிகளை தேர்ந்தெடுத்துள்ளேன் என்பதை அறிவேன். இருப்பினும் அந்த தேர்வில் நான் உறுதியாக இருக்கிறேன். ஏனெனில் இந்தியாவில் இருக்கும் மைதானங்கள் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன். உலகக்கோப்பை நடைபெறும் மைதானங்கள் மோசமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. மேலும் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் ஃபைனல் செல்வதற்கு வாய்ப்புள்ளது. ஒருவேளை அவர்கள் அந்த போட்டிக்கு வந்தால் அதை பார்ப்பது சிறப்பாக இருக்கும்”

ABD

“அதே சமயம் ஃபைனலில் தென்னாப்பிரிக்கா விளையாடுவதை நான் விரும்புகிறேன். இது தென்னாபிரிக்காவுக்கு எளிதாக இருக்கப்போவதில்லை. ஆனால் அவர்கள் எப்போதும் முடியாது என்று சொல்ல மாட்டார்கள். குறிப்பாக இந்த உலக கோப்பையில் தென்னாபிரிக்கா மீது அனைவரிடமும் குறைவான எதிர்பார்ப்பு இருக்கிறது என்பதே அவர்களுக்கு மிகப்பெரிய உந்துதலாக இருக்கும். அவர்கள் திறமையான அண்டர்ரேட்டட் அணியாக இருக்கிறார்கள்” என்று கூறினார். அவர் கூறுவது போல இந்த உலகக் கோப்பை தரமாக இருக்க வேண்டும் என்பதற்காக போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் பேட்டிங், பவுலிங் ஆகிய அனைத்திற்கும் சமமாக இருக்கும் வகையில் பிசிசிஐ பல கோடிகளை செலவழித்து புதுப்பித்து வருகின்றது.

இதையும் படிங்க:தோனி மாதிரி வரமுடியாது, முடிஞ்சா என் கருத்தை பொய்யாக்கிட்டு ஜெயிச்சு காட்டுங்க – 2023 உ.கோ முன்பாக ரோஹித்துக்கு அக்தர் சவால்

அதே போல ஏபி டீ வில்லியர்ஸ், டு பிளேஸிஸ் நட்சத்திர வீரர்கள் தற்சமயத்தில் இல்லாத காரணத்தால் மற்ற அணிகளை காட்டிலும் தென்னாப்பிரிக்கா மீது குறைவான எதிர்பார்ப்பும் அழுத்தமும் இருக்கிறது. அதை பயன்படுத்தி தங்களது அணி கனவு கோப்பையை வெல்வதற்கு போராடும் என்று ஏபிடி நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement