இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இனிமேல் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளார்கள். கடந்த 15 வருடங்களுக்கு மேலாக விளையாடி வரும் அவர்கள் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளனர். இருப்பினும் தற்போது அவர்கள் 36 வயதைக் கடந்து விட்டதால் படிப்படியாக ஓய்வு பெற்று வருகிறார்கள்.
2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் ஜோடியாக ஓய்வு பெற்ற அவர்கள் சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விடை பெற்றனர். 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை இந்தியா வெல்ல உதவிய அவர்கள் இனிமேல் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாட உள்ளனர். தென்னாப்பிரிக்காவில் நடைபெற உள்ள 2027 உலகக் கோப்பையே அவர்கள் இந்தியாவுக்காக விளையாடும் கடைசி ஐசிசி தொடராக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
விராட், ரோஹித் சந்தேகமே:
இந்நிலையில் 2027 உலகக் கோப்பையில் விராட் கோலி, ரோஹித் சர்மா இந்தியாவுக்காக விளையாடுவது சந்தேகம் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ஏனெனில் இனிமேல் அடிக்கடி இடைவெளி விட்டு குறைவாக விளையாடப் போகும் அவர்கள் ஃபார்மை இழக்க வாய்ப்புள்ளதாக கருத்துக்கள் கூறியுள்ளார். அதற்கிடையே நிறைய இளம் வீரர்களும் சிறப்பாக விளையாடிய அவர்களுக்கு போட்டியைக் கொடுக்க வாய்ப்புள்ளதாகவும் ஹர்பஜன் தெரிவிக்கின்றார்.
அது போன்ற காரணிகள் 2 வருடங்கள் கழித்து நடைபெற உள்ள உலகக்கோப்பையில் விராட் கோலி, ரோஹித் விளையாடுவதை தடுக்கலாம் என்று ஹர்பஜன் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “உண்மையில் உலகக் கோப்பை தொலைவில் இருக்கிறது. அதற்கு இன்னும் நீண்ட காலம் இருக்கிறது. அவர்கள் வேறு ஃபார்மெட்டில் விளையாடவில்லை”
தோனியை பாருங்க:
“நீங்கள் எவ்வளவு அர்ப்பணிப்புடன் செயல்பட்டாலும் அல்லது நீங்கள் எவ்வளவு சிறந்தவராக இருந்தாலும் தொடர்ச்சியாக விளையாடா விட்டால் அனைத்துமே கடினமாகும். நீங்கள் தொடர்ச்சியாக விளையாடாத போது விளையாட்டு உங்களை முந்திக்கொண்டு செல்லும். நீங்கள் பின்தங்குவீர்கள். எனவே அது மிகவும் கடினமாக இருக்கும். எடுத்துக்காட்டாக எம்எஸ் தோனி ஐபிஎல் தொடரில் விளையாடுவதைப் பாருங்கள்”
இதையும் படிங்க: பந்துவீச்சில் என்னுடைய இன்ஸ்பிரேஷன் அவர்தான்.. ஆஸ்திரேலிய வீரரை கை காட்டிய – அன்ஷுல் காம்போஜ்
“கடந்த 3 வருடங்களில் அவருடைய செயல்பாடுகளைப் பாருங்கள். தோனியின் தற்போதைய ஆட்டத்திற்கும், 6 வருடத்திற்கு முன் இந்தியாவுக்காக தொடர்ச்சியாக விளையாடிய போது ஐபிஎல் தொடரில் தோனி வெளிப்படுத்திய ஆட்டத்திற்கும் நிறைய வித்தியாசம் இருப்பதை உங்களால் பார்க்க முடியும்” என்று கூறினார். அடுத்ததாக விராட், ரோஹித் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் நடைபெறும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.



