இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இந்திய அணியானது ஒன்றுக்கு இரண்டு (1-2) என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இதன் காரணமாக இந்திய அணி தற்போது இந்த தொடரை இழக்கும் அபாயத்தில் இருக்கிறது.
பந்துவீச்சில் இவர்தான் என்னோட இன்ஸ்பிரேஷன் : அன்ஷுல் கம்போஜ்
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது வரும் ஜூலை 23-ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் நடைபெற இருக்கிறது. இந்த நான்காவது போட்டி இந்தியாவிற்கு வாழ்வா? சாவா? போட்டியாக மாறியுள்ளது. ஏனெனில் இந்த நான்காவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்ய முடியும்.
இதன் காரணமாக இந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் இந்த நான்காவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் முக்கிய வீரர்களான ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், நிதீஷ்குமார் ரெட்டி ஆகியோர் காயமடைந்துள்ளனர். இதன் காரணமாக மாற்றுவீரராக சி.எஸ்.கே அணியில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளரான அன்ஷுல் கம்போஜ் இந்திய டெஸ்ட் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் இந்திய ஏ அணியுடன் இங்கிலாந்து நாட்டிற்கு சென்று சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்திய அணியுடன் முதல் முறையாக இணைந்ததை அடுத்து தனது கிரிக்கெட் பயணம் குறித்து சில கருத்துக்களை அன்ஷுல் கம்போஜ் பகிர்ந்து கொண்டார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறியதாவது : நான் 12 வயதிலிருந்து தொழில்முறை கிரிக்கெட்டை விளையாடி வருகிறேன். என்னுடைய வளர்ச்சியில் என்னுடைய தந்தையின் பங்கும், ஆதரவும் அதிகம். ஒவ்வொரு நாளும் வீட்டில் இருந்து 2 மணி நேரம் பயணம் செய்து தான் கிரிக்கெட் விளையாடுவேன். என்னுடைய பந்துவீச்சில் நான் கிளன் மெக்ராத்தை இன்ஸ்பிரேஷனாக கொண்டுள்ளேன்.
இதையும் படிங்க : ஒரே போட்டியுடன் தமிழக வீரரான சாய் சுதர்சனுக்கு இப்படி நடந்தது அநியாயம் – ஹர்பஜன் சிங் கருத்து
அவரைப் போன்று நிலையான பந்துவீச்சும், விக்கெட்டெடுக்கும் திறனையும் வளர்த்துக் கொள்ள ஆசைப்படுகிறேன். அவர்தான் என்னுடைய கிரிக்கெட்டின் இன்ஸ்பிரேஷன் என அன்ஷுல் கம்போஜ் தெரிவித்துள்ளார். 24 வயதான ஹரியானாவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான இவர் இதுவரை 24 முதல்தர போட்டிகளில் விளையாடி 79 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



