இந்திய கிரிக்கெட் அணி நியூஸிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இதுவரை நடந்த 2 போட்டிகளிலும் தோற்றுள்ளது. அதனால் நியூஸிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரில் இந்தியா அவமான தோல்வியை பதிவு செய்துள்ளது. மேலும் 12 வருடங்கள் கழித்து இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு தொடரில் தோல்வியை சந்தித்துள்ளது.
இந்தத் தோல்விக்கு விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜடேஜா போன்ற மூத்த வீரர்கள் சுமாராக விளையாடியது முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரர்களை கழற்றி விட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் நேரம் வருவது போல் தெரிவதாக ஹர்பஜன் சிங் வெளிப்படையாக விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
சச்சின், கவாஸ்கர் மாதிரி:
“இந்திய அணியில் சில வீரர்கள் வயது காரணத்தால் தடுமாறுகின்றனர். விராட் கோலி, ஜடேஜா ஃபிட்டாக உள்ளார்கள். வயது, ஃபிட்னஸ், ஃபார்ம் ஆகியவை தேர்வுக்கான அளவுகோலாகும். ஆனால் நீங்கள் தோல்வியை சந்திக்கும் போது கேள்விகள் எழும். அது கண்டிப்பாக அணியில் உள்ள சீனியர்கள் மீது வரும். இங்கே மாற்று வீரர்கள் கிடைக்க மாட்டார்கள் என்று யார் சொன்னார்கள்?”
“கவாஸ்கர் வந்து சென்றார். டெண்டுல்கர் வந்து சென்றார். தற்போது விராட் கோலி இருக்கும் நிலையில் வருங்காலத்திலும் ஒருவர் கிடைப்பார். விராட் கோலி, ரோஹித் சர்மா போல தற்போது நமக்கு சர்பராஸ் கான் எப்படி கிடைத்தார்? அவர்கள் அனைவரும் உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து கிடைத்தனர். இவை அனைத்தும் சரியான வீரர்களுக்கு சரியான நேரத்தில் வாய்ப்பு கொடுப்பதை பற்றியதாகும்”
உள்ளூரில் கிடைப்பாங்க:
“சரியான வாய்ப்பு கொடுத்தால் விராட் கோலி கிடைப்பார் அல்லது வாய்ப்பு கிடைக்காதவர்கள் அன்மோல் மஜும்தார், அமர்ஜீத் காய்ப்பே போல சென்று விடுவார்கள். விராட் கோலி இந்த நிலையை எட்டுவதற்கு 15 வருடங்கள் தேவைப்பட்டது. எனவே நீங்கள் திறமையானவரை பார்க்க வேண்டும். ஒருவேளை ஒருவர் மேட்ச் வின்னராக இருப்பது போல் தெரிந்தால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்க வேண்டும்”
இதையும் படிங்க: தோனியின் அந்த இடத்தை நிச்சயம் ரிஷப் பண்ட்டால் நிரப்ப முடியும் – சைமன் டவுள் நம்பிக்கை
“நாங்கள் விளையாடும் போது ரோஹித் சர்மா அற்புதமான திறமை கொண்டவர் என்று கேள்விப்பட்டோம். அது எப்படி நமக்கு தெரிந்தது? ஏனெனில் ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து பெரிய ரன்கள் குவித்தனர். எனவே இந்திய அணியில் உள்ள எவ்வளவு பெரிய நட்சத்திர வீரர்களுக்கும் தகுதியான மாற்று வீரர்கள் கண்டிப்பாக நமக்கு உள்ளூரில் கிடைப்பார்கள்” என்று கூறினார்.



