
ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி முதல் போட்டியில் அபார வெற்றி பெற்றது. ஆனால் 2வது போட்டியில் இந்தியாவை தோற்கடித்த ஆஸ்திரேலியா தொடரை சமன் செய்து பதிலடி கொடுத்துள்ளது. அதனால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு செல்ல அடுத்த போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.
முன்னதாக இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி முதல் போட்டியில் சதத்தை அடித்து ஃபார்முக்கு திரும்பியதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் இரண்டாவது போட்டியில் அதற்கு நேர்மாறாக மீண்டும் சுமாராக விளையாடிய அவர் தோல்விக்கு காரணமாக அமைந்தார். அதனால் விமர்சனங்களை சந்தித்துள்ள அவர் கம்பேக் கொடுப்பதற்காக இரண்டாவது போட்டி முடிந்ததுமே உடனடியாக பயிற்சிகளை எடுப்பதற்காக சென்றார்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் இயற்கையாகவே இருக்கும் அதிகப்படியான பவுன்ஸை சமாளிப்பதற்காக விராட் கோலி ஃபேக் ஃபுட்டில் பயிற்சிகளை எடுப்பதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். அந்த முக்கியமான புள்ளியை பிடித்து பயிற்சி எடுப்பதால் விராட் கோலி மீண்டும் கம்பேக் கொடுப்பார் என்றும் ஹர்பஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். விராட் கோலியின் பயிற்சியை நேரில் பார்த்த பின் இது பற்றி அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.
“இன்று விராட் கோலி வலைப்பயிற்சியில் நான் பார்த்தேன். அவருடன் நான் நிறைய கிரிக்கெட்டையும் விளையாடினேன். பொதுவாக அவர் முன்னங்காலில் (ஃபிரண்ட் ஃபுட்) விளையாடக் கூடிய வீரர். இந்திய மண்ணில் குறைவான பவுன்ஸ் இருக்கும் என்பதால் நீங்கள் முன்னங்காலில் விளையாடுவது சரியாக இருக்கும். ஆனால் பாண்டிங், ஸ்டீவ் வாக், லாங்கர், ஹைடன் ஆகியோர் தங்கள் நாட்டில் இருக்கும் அதிகப்படியான பவுன்ஸ் காரணமாக பின்னங்காலில் (பேக் ஃபுட்) விளையாடுவார்கள்”
“ஆஸ்திரேலியாவில் நீங்கள் பவுன்ஸை சமாளித்து விளையாடும் வீரராக இருக்க வேண்டும். அதற்கு பின்னங்காலில் நீங்கள் நல்ல வீரராக இருக்க வேண்டும். அதைத்தான் விராட் கோலி பயிற்சி எடுக்கிறார். இன்று நான் பார்த்த வரையில் அவர் நிறைய பந்துகளை பின்னங்காலில் எதிர்கொள்கிறார். 3வது போட்டி நடைபெறும் காபா மைதானம் வித்தியாசமானதாக இருக்கும்”
இதையும் படிங்க: பயப்படும் அளவுக்கு ஆஸி ஒர்த்தில்ல.. ஹெட் வீக்னெஸை அடிச்சு கம்பேக் கொடுங்க.. இந்தியாவுக்கு ஃகைப் அட்வைஸ்
“அங்கே அவர் அதிகப்படியான வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டும். எனவே பின்னங்கால் ஆட்டத்தை அவர் தன்னுடைய பேட்டிங்கில் சேர்ப்பது அவசியமாகும். அதில் தற்போது விராட் கோலி வேலை செய்வதை பார்ப்பது நன்றாக இருக்கிறது. விராட் கோலி எப்போதுமே பின்னடைவை சந்திக்கும் போது கம்பேக் கொடுக்கக்கூடிய வீரர் என்பது எனக்கு உறுதியாக தெரியும்” என்று கூறினார்.