நியூசிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த ஊரில் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் இந்தியா அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்துள்ளது. அதனால் சொந்த மண்ணில் 12 வருடங்கள் கழித்தும் நியூசிலாந்துக்கு எதிராக முதல் முறையாகவும் இந்தியா ஒரு டெஸ்ட் தொடரில் அவமானத் தோல்வியை சந்தித்துள்ளது.
அந்த தோல்விக்கு ரோகித் சர்மா, விராட் கோலி ஆகிய சீனியர் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் பிடிக்காதது முக்கிய காரணமாக அமைந்தது. அதனால் 36 வயதை கடந்து விட்ட அவர்களை கழற்றி விட வேண்டிய நேரம் வந்துவிட்டதாக சில ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசினார்கள். இந்நிலையில் விராட், ரோஹித்தை உடனடியாக கழற்றி விட வேண்டிய அவசியமில்லை என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
நேரம் வந்தாச்சு:
இருப்பினும் அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் துவங்கும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அவர்களுடைய கேரியரை தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும் என்று ஹர்பஜன் தெரிவித்துள்ளார். அந்தத் தொடரில் அவர்களின் செயல்பாடுகளை பார்த்து விட்டு சரியான முடிவை எடுக்க வேண்டும் என்றும் ஹர்பஜன் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“உடனடியாக எந்த முடிவும் தேவையில்லை. ஏனெனில் ஆஸ்திரேலியாவில் பெரிய தொடர் இருக்கிறது. பின்னர் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் ஆஸ்திரேலிய தொடர் நம்முடைய அணியில் பலருக்கு வாய்ப்பை தொடரலாமா அல்லது முடிக்கலாமா என்பதை காண்பித்துக் கொடுக்கும். அவர்களுக்கு தகுந்த மாற்று வீரர்கள் கிடைக்க மாட்டார்கள் என்று யார் சொன்னார்கள்”
புதியவர்களுக்கு வாய்ப்பு:
“கடந்த காலத்தைப் போலவே வருங்காலத்திலும் உங்களுக்கு சரியான மாற்று வீரர்கள் கிடைப்பார்கள். இந்த விளையாட்டு நகரும் போது மாற்று வீரர்கள் தாமாக கிடைப்பார்கள். உள்ளூரில் நிறைய திறமையான வீரர்கள் உள்ளனர். விராட் கோலி, ரோஹித் சர்மா தற்போது சர்பராஸ் கான் ஆகியோர் உங்களுக்கு உள்ளூரிலிருந்தே கிடைத்தார்கள். அவை அனைத்தும் சரியான வீரர்களுக்கு சரியான நேரத்தில் வாய்ப்பு கொடுப்பதைப் பற்றியதாகும்”
இதையும் படிங்க: 12 வருடங்கள் 18 தொடர்கள்.. உலகிலேயே அவங்களுக்கு சமமான இந்தியாவில் இதை செஞ்சது பெரிய சாதனை.. டிம் சௌதீ
“நீங்கள் சரியான நேரத்தில் ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்தால் விராட் கோலி கிடைப்பார். இல்லையேல் அமோல் மஜும்தார் போல திறமையான வீரர்கள் அடையாளம் காணாமல் போவார்கள். விராட் கோலி இந்த நிலையை தொடுவதற்கு 15 வருடங்கள் தேவைப்பட்டது. எனவே திறமையான வீரர்களை கண்டறிந்து மேட்ச் வின்னர்களாக தெரிந்தால் அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்க வேண்டும். இங்கே ரோஹித் சர்மா உள்ளூரில் சிறப்பாக செயல்பட்டதாலேயே நமக்கு கிடைத்தார்” என்று கூறினார்.



