- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அப்படினா எல்லாரும் சச்சின் ஆகிருப்பாங்களே.. கோலியை விமர்சித்த சஞ்சய் மஞ்ரேக்கருக்கு ஹர்பஜன் பதிலடி

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சர்வதேச போட்டிகளில் சச்சினுக்கு பின் அதிக ரன்கள் குவித்து 84 சதங்கள் அடித்துள்ளார். கடந்த 17 வருடங்களுக்கு மேலாக விளையாடி வரும் அவர் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். எனவே நவீன கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக போற்றப்படும் அவர் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஓய்வு பெற்று விட்டார்.

தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வரும் விராட் கோலி 2027 உலகக் கோப்பையில் களமிறங்கி வெற்றியுடன் விடை பெற திட்டமிட்டுள்ளார். முன்னதாக 2020/21 வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடி வந்த அவர் ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சனை காட்டிலும் அதிக ரன்கள், சதங்கள் அடித்திருந்தார். ஆனால் அதன் பின் சரிவை சந்தித்த அவர் 2025இல் ஓய்வு பெற்றார்.

- Advertisement -

மஞ்ரேக்கர் விமர்சனம்:

மறுபுறம் 2021க்குப்பின் விஸ்வரூபம் எடுத்த ஜோ ரூட் இந்திய ஜாம்பவான் சச்சினுக்கு அடுத்தபடியாக அதிக ரன்கள் குவித்து சாதனைகளை படைத்து வருகிறார். அதைப் பார்க்கும் போதெல்லாம் டெஸ்ட் கிரிக்கெட்டில் கம்பேக் கொடுக்காமலேயே விராட் கோலி ஓய்வு பெற்றது தமக்கு சோகமளிப்பதாக சமீபத்தில் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

அத்துடன் டாப் 3 இடங்களில் விளையாடும் பேட்ஸ்மேன்களுக்கு ஒருநாள் போட்டிகள் தான் இருப்பதிலேயே மிகவும் எளிதான ஃபார்மட் என்றும் அவர் தெரிவித்திருந்தார். எனவே கடினமான டெஸ்ட் கிரிக்கெட்டில் விடைபெற்று எளிதான ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்கு பேசாமல் விராட் கோலி மொத்தமாக ஓய்வு பெற்றிருக்கலாம் என்றும் அவர் விமர்சித்திருந்தார். இந்நிலையில் ஒருவேளை ஒருநாள் போட்டிகள் எளிதாக இருந்திருந்தால் அனைவருமே சச்சின் போல சாதித்திருப்பார்களே என்று அவருக்கு ஹர்பஜன் சிங் மறைமுகமான பதிலடி கொடுத்துள்ளார்.

- Advertisement -

ஹர்பஜன் பதிலடி:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “எந்த ஃபார்மெட்டாக இருந்தாலும் ரன்கள் அடிப்பது சுலபமாக இருந்திருந்தால் எல்லோரும் அதைச் செய்திருப்பார்கள். எனவே வீரர்கள் செய்வதை ரசிப்போம். நன்றாக விளையாடும் அவர்கள் ரன்கள், விக்கெட்டுகளை எடுத்து போட்டிகளில் வெற்றி பெறுகிறார்கள். அதுவே முக்கியம். மற்றபடி யார் எந்த ஃபார்மட்டில் விளையாடுகிறார்கள் என்பது முக்கியமல்ல”

இதையும் படிங்க: ஏபிடி மாதிரி திறமையான சூரியகுமார் சேமிச்சு வெச்சுருக்காரு.. இந்தியா அடுத்தடுத்த சாதனை படைக்கும்.. ஹர்பஜன்

“விராட் கோலியை பொறுத்த வரை ஒரு ஃபார்மட்டில் விளையாடுகிறார் அல்லது அனைத்து ஃபார்மட்டில் விளையாடுகிறார் என்பது முக்கியமல்ல. சிறந்த வீரரான அவர் இந்தியாவுக்காக நீண்ட காலம் மிகப்பெரிய மேட்ச் வின்னராக விளையாடியுள்ளார்” என்று கூறினார். இதற்கிடையே 37 வயதிலும் ஒருநாள் கிரிக்கெட்டில் அசத்தும் விராட் கோலி ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -