ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பை பிப்ரவரி 7ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் துவங்க உள்ளது. அத்தொடரில் தங்களுடைய சொந்த மண்ணில் களமிறங்கும் இந்திய கிரிக்கெட் அணி மீண்டும் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்குமா என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதற்கு கேப்டன் சூரியகுமார் யாதவ் ஃபார்முக்கு வருவது அவசியமாகிறது.
ஒருநாள் போட்டிகளில் தடுமாறிய அவர் டி20 கிரிக்கெட்டில் எப்படி போட்டாலும் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் அடித்து நொறுக்கும் திறமையை வெளிப்படுத்தினார். அதனால் இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று அவரைப் பல முன்னாள் வீரர்கள் பாராட்டினர். அதே வேகத்தில் விளையாடிய சூரியகுமார் ஐசிசி டி20 தரவரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறினார்.
சேமிச்சு வைக்கும் கேப்டன்:
அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ஆட்டநாயகன் விருதுகளை வென்ற இந்திய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையையும் அவர் சமன் செய்துள்ளார். அப்படிப்பட்ட மேட்ச் வின்னரான சூரியகுமார் கேப்டனாக பொறுப்பேற்றது முதல் பெரிய ரன்கள் குவிக்க தடுமாறுகிறார். இந்நிலையில் ஏபி டீ வில்லியர்ஸ் போல டி20 கிரிக்கெட்டில் 360 டிகிரியில் அடிக்கும் திறமையுடைய சூரியகுமார் 2026 டி20 உலகக் கோப்பையில் அசத்துவதற்காக ரன்களை சேமித்து வைத்துள்ளதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
மேலும் மேட்ச் வின்னர்களால் நிறைந்துள்ள இந்திய அணி 2024 போல மீண்டும் டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைக்கும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். இது பற்றி ஹர்பஜன் பேசியது பின்வருமாறு. “கிளாஸ் பிளேயரான சூரியகுமார் ஒருவேளை தம்முடைய ரன்களை உலகக் கோப்பைக்காக சேமித்து வைத்திருக்கலாம். இப்போதும் டி20 ஃபார்மெட்டில் அவர் நம்பர் ஒன் பிளேயர் என்று நான் நம்புகிறேன்”
ஹர்பஜன் நம்பிக்கை:
“மக்கள் ஏபி டீ வில்லியர்ஸ் எவ்வளவு மகத்தானவர் என்று பேசுகிறார்கள். ஆனால் அதே வேலையை செய்வதற்கு நம்மிடமும் சொந்தமாக ஒருவர் இருக்கிறார். எனவே இந்தியாவுக்காக டி20 உலகக் கோப்பையில் அவர் அசத்துவார் என்று நான் ஆதரவளிக்கிறேன். கேப்டனாக மட்டுமின்றி பேட்ஸ்மேனாக அவர் பெரிய ரன்கள் குவிப்பார் என்று நம்புகிறேன். எங்கு விளையாடினாலும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதே அழுத்தமானதாகும்”
இதையும் படிங்க: கடுமையான உழைப்புக்கு பிறகு இப்படி நடந்ததில் வருத்தம்.. தனது நீக்கம் குறித்து பேசிய – ஜிதேஷ் சர்மா
“உங்களது சொந்த மண்ணில் ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாடுவது ஆசீர்வதிக்கப்பட்ட விசயமாகும். மற்றவர்களைக் காட்டிலும் உங்களுக்கு சொந்த மண் பற்றி நன்றாகத் தெரியும். ஆதரவும் அதிகமாக இருக்கும். நம்முடைய அணியில் போதுமான மேட்ச் வின்னர்கள் உட்பட அனைத்தும் இருக்கிறது. எனவே கோப்பை இந்தியாவிலேயே இருக்கும் என்று நம்பலாம். இம்முறை இந்தியா அடுத்தடுத்த கோப்பைகளை வெல்வது முதல் முறையாக இருக்கக்கூடும்” என்று கூறினார்.



