சர்பராஸ் கான் தப்பே பண்ணிருந்தாலும் சீனியரான நீங்க தான் பேசியிருக்கனும்.. கம்பீருக்கு ஹர்பஜன் அட்வைஸ்

Harbhajan Singh 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்குள் தற்போது விரிசல்கள் இருப்பதாக செய்திகள் காணப்படுகின்றன. குறிப்பாக நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான சமீபத்திய டெஸ்ட் தொடர்களில் இந்திய அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தது. அதன் காரணமாக முதல் முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறாமல் இந்தியா வெளியேறியது. அதனால் இந்திய வீரர்களிடம் புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மிகவும் கோபமாக பேசியதாக செய்திகள் வெளியாகின.

அதே சமயம் அந்த தகவல்கள் இந்திய அணியிலிருந்து எப்படி கசிகிறது என்ற கேள்வி காணப்பட்டது. அதற்கு தமக்கு வாய்ப்பு கொடுக்காத அதிருப்தியில் இளம் வீரர் சர்பராஸ் கான் தான் இந்திய அணிக்குள் நடக்கும் விஷயங்களை லீக் செய்ததாக நேற்று புதிய செய்தி வெளியானது. அது பற்றி ஜனவரி 11ம் தேதி நடைபெற்ற பிசிசிஐ கூட்டத்தில் தேர்வாளர்களிடம் சர்பராஸ் கான் பற்றி கௌதம் கம்பீர் புகார் செய்ததாகவும் தெரிய வந்துள்ளது.

- Advertisement -

தப்பே செய்தாலும்:

இந்நிலையில் இப்படி தினம் தினம் இந்திய அணியிலிருந்து ஏதேனும் தகவல்கள் கசிவதை பார்ப்பது கவலையளிப்பதாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். மேலும் இளம் வீரர்கள் தவறு செய்தால் அவர்களுக்கு கௌதம் கம்பீர் அறிவுரை வழங்க வேண்டுமே தவிர குறை சொல்லக்கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“ஆஸ்திரேலியா அல்லது அதற்குப்பின் கடந்த சில தினங்களில் நடைபெற்ற விஷயங்கள் வெளியே வந்திருக்கக்கூடாது. களத்தில் வெற்றிகளும் தோல்விகளும் இருக்கும். ஆனால் இந்திய அணியிலிருந்து எந்த புதிய கதைகளும் வரக்கூடாது. சர்பராஸ் கான் தான் இந்திய அணியிலிருந்து ஊடகங்களில் தகவல்களை கசிய விடுகிறார் என்று கம்பீர் சொன்னதாக இன்று ஒரு புதிய கதை வந்துள்ளது”

- Advertisement -

ஹர்பஜன் அட்வைஸ்:

“ஒருவேளை கம்பீர் அப்படி கூறியிருந்தால் அது சரியல்ல. ஒருவேளை சர்பராஸ் கான் ஆஸ்திரேலியாவில் இதை செய்திருந்தாலும் பயிற்சியாளரான நீங்கள் அவரிடம் அது பற்றி பேசியிருக்க வேண்டும். இளம் வீரரான அவருக்கு புரிய வைத்திருக்க வேண்டும். ஏனெனில் அவர் வருங்காலங்களில் இந்தியாவுக்காக விளையாடுவார்”

இதையும் படிங்க: பீட்டர்சன் வேண்டாம்.. இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராகும் கோட்டக்.. யார் இவர்? என்ன தகுதி இருக்கு?

“இளம் வீரர்களுக்கு ஞானத்தை வழங்குவது சீனியர் வீரர்களான நமது கடமை. சர்பராஸ் கான் அல்லது கௌதம் கம்பீர் அப்படி தெரிவித்திருந்தால் அது தவறான விஷயமாகும். அணிக்குள் நடக்கும் விவாதங்கள் பொதுவெளியில் வரக்கூடாது. புதிதாக வந்துள்ள கம்பீருக்கு நேரம் கொடுக்க வேண்டும். அவரது தலைமையில் இணைய வீரர்களுக்கும் நேரம் கொடுக்கப்பட வேண்டும். கடந்த 6 – 8 மாதங்களில் இந்திய கிரிக்கெட்டில் நிறைய வதந்திகள் வந்தன. நீங்கள் அவற்றை ஒன்றாக அமர்ந்து பேசி தீர்க்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement