ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தானில் துவங்குகிறது. அதில் பாகிஸ்தான் தங்களுடைய சொந்த மண்ணில் நடப்பு சாம்பியனாக விளையாட உள்ளது. மறுபுறம் இந்திய அணி தங்களுடைய போட்டிகளை துபாயில் விளையாடி 2013க்குப்பின் கோப்பையை வெல்ல தயாராக உள்ளது.
முன்னதாக வழக்கம் போல இம்முறையும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கு அதிகப்படியான எதிர்பார்ப்புகள் இருக்கிறது. ஏனெனில் கிரிக்கெட்டின் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் வெற்றியை கவுரவமாக கருதி அதைப் பெறுவதற்காக ஆக்ரோசத்துடன் போராடுவார்கள். அதனால் அந்தப் போட்டியில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதே இந்தியா – பாகிஸ்தான் மோதல்களின் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.
ஓவர்ரேட்டட் மோதல்:
இந்நிலையில் இந்தியாவுக்கு சமமான போட்டியை கொடுக்கக்கூடிய அணியாக பாகிஸ்தான் தற்போது இல்லை என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். அதனால் இந்தியா அணிக்கு பாகிஸ்தான் ஓவர்ரேட்டட் எதிரி மட்டுமே என்று அவர் மறைமுகமாக கூறியுள்ளார். இது பற்றி புள்ளிவிவரங்களுடன் அவர் தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.
“இந்தியா – பாகிஸ்தான் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் இது இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நடைபெறும் ஓவர்ஹைப் போட்டியாகும். ஏனெனில் அதில் ஒன்றுமில்லை. அவர்களுடைய முதன்மை பேட்ஸ்மேன்களை பற்றி பாருங்கள். அவர்களுடைய முதன்மை பேட்ஸ்மேன் பாபர் அசாம் இந்தியாவுக்கு எதிராக அவருடைய சராசரி 31. நீங்கள் டாப் பேட்ஸ்மேனாக இருக்க வேண்டுமெனில் 50க்கும் மேற்பட்ட சராசரியை கொண்டிருக்க வேண்டும்”
ஹர்பஜன் வெளிப்படை:
“அடுத்ததாக ரிஸ்வான் இருக்கிறார். அவரை எனக்கு பிடிக்கும். ஆனால் இந்தியாவுக்கு எதிராக அவருடைய சராசரியும் 25. பஃகார் ஜமான் முழுநேர துவக்க வீரராக இருந்தும் 46 என்ற சராசரியை மட்டுமே கொண்டுள்ளார். அது நன்றாக இருக்கிறது. இருப்பினும் அவர் போட்டியை இந்தியாவிடம் இருந்து பறிக்கக் கூடியவர். பஹீம் அஸ்ரப் 12.5 என்ற சராசரி மட்டும் கொண்டுள்ளார். அவரும் பெரிய அச்சுறுத்தலைக் கொடுப்பார் என்று எனக்குத் தெரியவில்லை”
இதையும் படிங்க: ஐபிஎல் 2025: சிஎஸ்கேவுக்கு எதிரான ஓப்பனிங் போட்டியிலேயே பாண்டியா விளையாட தடை.. காரணம் இதோ
“ஷகீல் இந்தியாவுக்கு எதிராக 8 சராசரி மட்டுமே கொண்டுள்ளார். அந்த வகையில் அவர்களுடைய பேட்டிங் வரிசையை பார்க்கும் போது இந்தியாவுக்கு எதிராக போராடுவார்கள் என்ற தன்னம்பிக்கை கூட எனக்கு இல்லை” எனக் கூறினார். அவர் கூறுவது போல 2017, 2021 தவிர்த்து 21ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற பெரும்பாலான ஐசிசி தொடர்களில் பாகிஸ்தான் அணியை இந்தியா தோற்கடித்துள்ளது. இதைத் தொடர்ந்து வரும் பிப்ரவரி 23ஆம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.



