ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா தங்களது முதல் போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் 171 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதைத் துரத்திய இந்தியா 18.5 ஓவரில் இலக்கைத் தொட்டு 2வது முறையாக இத்தொடரில் பாகிஸ்தானை எளிதாக தோற்கடித்தது.
முன்னதாக அப்போட்டியில் பாகிஸ்தான் வீரர் ஃபர்கான் அரை சதமடித்த போது இந்தியாவை கிண்டல் செய்யும் வகையில் துப்பாக்கியால் சுடுவது போல் கொண்டாடினார். அதே போல ஹரிஷ் ரவூப் ஆபரேஷன் சிந்தூரில் 6 இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது என்ற போலியான கருத்தை சைகையாக செய்து காட்டி இந்தியாவை கிண்டலடித்தார். அத்துடன் அபிஷேக் ஷர்மா – கில் ஆகியோர் ஆரம்பத்திலேயே பாகிஸ்தானை அடித்து நொறுக்கினர்.
பேச்சில் மட்டுமே முடியும்:
அப்போது அவர்களிடம் ஷாஹீன் அப்ரிடி, ரவூப் இருவருமே வாய்மொழியாக தேவையற்ற வார்த்தைகளை சொல்லி வம்பிழுத்தனர். அதற்கு அபிஷேக் – கில் வாயில் மட்டுமின்றி பேட்டால் அடித்து நொறுக்கி பதிலடி கொடுத்தனர். இந்நிலையில் பவர்பிளேவில் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாத ஹரிஷ் ரவூப், அப்ரிடி தேவையின்றி இந்திய வீரர்களிடம் வம்பிழுத்ததாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
அப்படி வாயில் பேசிய பாகிஸ்தானுக்கு செயலால் இந்தியா பதிலடி கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி ஹர்பஜன் பேசியது பின்வருமாறு. “ஒருவேளை பேசுவதில் போட்டி நடந்தால் அதில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். ஆனால் போட்டி பந்துக்கும் பேட்டுக்கும் இடையே நடந்தது. அங்கே தான் இந்தியா வெற்றி பெற்றது”
ஹர்பஜன் பதிலடி:
“பாகிஸ்தானை விட இந்தியா பன்மடங்கு முன்னிலையில் இருக்கிறது. ஹரிஷ் ரவூப், ஷாஹீன் அப்ரிடி உள்ளிட்ட பாகிஸ்தானின் சீனியர் பவுலர்கள் நிறைய ரன்களை வாரி வழங்கினர். அவர்களால் முதல் 6 ஓவரில் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியவில்லை. இத்தனைக்கும் அவர்கள் பாகிஸ்தானின் அனுபவமிக்க பவுலர்கள். உங்களுடைய அனுபவமிக்க வீரர்கள் பேட்டிங் அல்லது பந்து வீச்சில் அசத்தாமல் அப்படி வாயில் பேசினால் எதிர்பார்க்கும் முடிவுகள் கிடைக்காது”
இதையும் படிங்க: இந்தியாவை பற்றி வங்கதேசத்துக்கு கவலையில்ல.. இதை செஞ்சு சாதாரணமாக தோற்கடிப்போம்.. மெஹதி ஹசன்
“எனவே பாகிஸ்தானை வாயில் பேச விடுங்கள். நாம் பேட் மற்றும் பந்தில் பேசுவோம். தேவைப்படும் போதெல்லாம் நாம் செயலால் அவர்களுக்கு பதிலடி கொடுப்போம்” என்று கூறினார். மொத்தத்தில் கடைசியாக விளையாடிய 7 போட்டிகளிலும் பாகிஸ்தானை தொடர்ந்து 7 முறை தோற்கடித்துள்ள இந்தியா தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்து வருவது குறிப்பிடத்தக்கது.



