வங்கதேசத்துக்கு எதிராக கான்பூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கான்பூரில் மழையால் 2 நாள் ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டதால் அந்தப் போட்டி டிராவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி 2 நாட்களில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் வங்கதேசத்தை அடித்து நொறுக்கிய இந்தியா அற்புதமான மறக்க முடியாத வெற்றியை பெற்றது.
இந்நிலையில் உலகக் கோப்பையை வெல்லாததால் விராட் கோலி எந்த வகையிலும் குறைந்த கேப்டன் கிடையாது என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பாராட்டியுள்ளார். குறிப்பாக 2014 அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் கடைசி இன்னிங்ஸில் இந்தியா வெற்றி பெற 400+ ரன்கள் தேவைப்பட்டது. அப்போது தோற்றாலும் பரவாயில்லை என்ற எண்ணத்துடன் வலுவான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் கோலி வெற்றிக்கு போராடியதாக ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.
விராட் கோலியின் மரபு:
அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிக்காக அதிரடியாக விளையாட வேண்டும் என்ற மரபை விராட் கோலி விட்டுச் சென்றதாகவும் அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் ஹர்பஜன் பேசியது பின்வருமாறு. “விராட் கோலியின் தலைமையில் நீங்கள் உலகக் கோப்பையை வெல்லாமல் இருந்திருக்கலாம். அது அவரை குறைந்த கேப்டனாகவோ அல்லது வீரராகவோ மாற்றாது”
“இந்திய கிரிக்கெட் அணியில் அவர் தான் வெற்றிக்கான நெருப்பை உண்டாக்கினார். குறிப்பாக 4வது இன்னிங்ஸில் 400 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டாலும் அதை நாம் பதற்றமடையாமல் சேசிங் செய்ய வேண்டும் என்ற அணுகுமுறையை விராட் கோலி உருவாக்கினார். அதற்கு உங்களுக்கு நிறைய தைரியம் மற்றும் மூளை வேண்டும். அதை இந்திய அணியில் விராட் கோலி இந்திய அணியில் புகுத்தியுள்ளார்”
வெற்றிகரமான இந்திய அணி:
“எனவே இந்திய அணியில் ஒவ்வொருவரும் தங்களுடைய மரபை விட்டுச் சென்றுள்ளனர். 2021 காபா டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில், ரிஷப் பண்ட் ஆகியோர் கடைசி வரை போராடி வெற்றி கண்டனர். அது நம்முடைய அணியின் சிந்திக்கும் தன்மை மாறியதாலேயே உருவானது” என்று கூறினார். அவர் கூறுவது போல 2014இல் விராட் கோலி கேப்டனாக பொறுப்பேற்ற போது இந்தியா தரவரிசையில் 7வது இடத்தில் திண்டாடியது.
இதையும் படிங்க: ஐசிசி 2024 மகளிர் டி20 உ.கோ: இன்று துவங்கும் இந்தியாவின் போட்டி அட்டவணை.. எந்த சேனலில் பார்க்கலாம்
ஆனால் கேப்டனாக பொறுப்பேற்ற பின் அதிரடியான அணுகு முறையை பின்பற்றிய விராட் கோலி 2016 – 2021 வரை இந்தியாவை உலகின் நம்பர் ஒன் அணியாக ஜொலிக்க வைத்தார். அவருடைய தலைமையில் ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக இந்தியா டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைத்தது. மேலும் 48 வெற்றிகளை பெற்றுள்ள விராட் கோலி வெற்றிகரமான இந்திய மற்றும் ஆசிய கேப்டனாக சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



