- Advertisement -
இந்திய கிரிக்கெட்

டி20 உ.கோ இந்தியா பாகிஸ்தான் போட்டியில் இம்முறை வெற்றியாளர் யார்? – பதில் கூற மறுத்த முன்னாள் வீரர்

கிரிக்கெட்டில் பரம எதிரிகளில் முக்கிய எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் போட்டிகள் என்றாலே அதில் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. ஏனெனில் ஆசிய கண்டத்தின் அண்டை நாடுகளான இவ்விரு அணிகளும் கிரிக்கெட்டை ஒரு விளையாட்டாக பார்க்காமல் கௌரவமாக கருதுவதால் அதில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் முழுமூச்சுடன் மோதிக் கொள்வார்கள். அந்த நிலைமையில் சமீப காலங்களில் இந்த இரு நாடுகளுக்கிடையே நிலவும் எல்லைப் பிரச்சனைகள் காரணமாக இருதரப்பு தொடர்களில் நேருக்கு நேர் மோதுவதை தவிர்த்த வரும் இவ்விரு நாடுகளும் ஐசிசி உலகக்கோப்பை அல்லது ஆசிய கோப்பை போன்ற தொடர்களில் மட்டும் மோதி வருகின்றன.

அதனால் இவ்விரு அணிகள் மோதும் உலகக் கோப்பை போட்டிகளுக்கு முன்பை விட பல மடங்கு மவுசு கூடியுள்ளது. சொல்லப்போனால் இவ்விரு அணிகள் மோதுவதை பார்ப்பதற்காக அனைத்து ரசிகர்களும் இப்போதெல்லாம் ஒரு வருடம் காத்திருக்க வேண்டியுள்ளது. அது ஒரு பக்கமிருக்க வரலாற்றில் 1992 முதல் நடைபெற்ற 50 ஓவர் மற்றும் 20 ஓவர் ஐசிசி உலகக் கோப்பைகளில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்தியா தொடர்ச்சியாக ஒருமுறை கூட தோற்காமல் வெற்றி நடை போட்டு வந்தது.

- Advertisement -

அடக்கிய பாகிஸ்தான்:
அதனால் உலக கோப்பையை வெல்ல விட்டாலும் பரவாயில்லை எப்படியாவது இந்தியாவை தோற்கடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டும் பாகிஸ்தான் ஒவ்வொரு முறையும் தோல்வியடைந்தது தொடர்கதையானது. அதே காரணத்தால் உலக கோப்பை என்றால் இந்தியா எப்படியும் வென்று விடும் என்ற கருத்து பரவலாக எழுந்தது. அதனால் சற்று கர்வடைந்த இந்திய முன்னாள் வீரர்கள் இந்தியா தான் வெல்லும் என்று கூறி வந்தார்கள். போதாகுறைக்கு இந்த ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி வேறு “மோக்கா மோக்கா” எனும் விளம்பரத்தை போட்டு கர்வத்தை தலைக்கேற்றியது என்பதே நிதர்சனம்.

அப்படி கர்வம் தலைக்கேறினால் தோல்வி நிச்சயம் என்ற பழமொழியை போல 1992 – 2019 வரை தொடர்ச்சியாக வென்று வந்த இந்தியாவை கடந்த 2021இல் துபாயில் நடந்த ஐசிசி டி20 உலகக் கோப்பையில் பந்துவீச்சில் சாய்த்து பேட்டிங்கில் பந்தாடிய பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் வரலாற்று தோல்வியை பரிசளித்து சரித்திரத்தை மாற்றி புதிய வரலாறு படைத்தது. ஆனாலும் கூட எங்களை சாய்ப்பதற்கு பாகிஸ்தானுக்கு 30 வருடங்கள் தேவைப்பட்டது என்று தற்போதும் இந்திய ரசிகர்கள் பெருமையுடனே உள்ளனர்.

- Advertisement -

2022 உலககோப்பை:
இருப்பினும் அந்த வரலாற்று தோல்வியை மறக்காத இந்தியா அடுத்ததாக வரும் அக்டோபர் 23இல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 2022 டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மா தலைமையில் சிறப்பாக செயல்பட்டு பழிதீர்க்க தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த வருட இந்தியா – பாகிஸ்தான் மோதலில் வெல்லப் போவது யார் என்று கேள்விக்கு முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் கடந்த முறை இந்தியா வெல்லும் என்று பதிலளித்து வாங்கி கட்டிக் கொண்டதே போதும் என்ற வகையில் பதிலளித்துள்ளார். ஏனெனில் கடந்த வருடம் இதே கேள்விக்கு பாகிஸ்தானுக்கு இந்தியா தோல்வியை பரிசளித்து வழக்கமான வெற்றி நடையில் பயணிக்கும் என்று பதிலளித்திருந்த ஹர்பஜன்சிங் அந்த நிகழ்ச்சியில் உடனிருந்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தரை கலாய்த்திருந்தார்.

ஆனால் இறுதியில் பாகிஸ்தான் தோற்றதால் பல்பு வாங்கிய அவரை “ஆம் சொல்லுங்கள் ஹர்பஜன் சிங். நீங்கள் இன்னும் வெற்றி பயணத்தை விரும்புகிறீர்களா? இல்லை? சரி. சரி விடுங்கள் ஒருவர் என்ன செய்ய முடியும். இந்த தோல்வியை நிதானமாக பொறுத்துக்கொண்டு நாளை அனுபவியுங்கள்” என்று சியர்ஸ் சொல்லி தனியாக வீடியோ போட்டு கலாய்த்திருந்தார். அதனால் இம்முறை சுதாரித்துள்ள ஹர்பஜன் சிங் அந்த போட்டியை பற்றி இப்போது கூறுவதற்கு எதுவுமில்லை என்று பதிலளித்துள்ளார்.

- Advertisement -

தெறித்து ஓட்டம்:
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நமக்கு மீண்டும் ஒரு டி20 உலகக்கோப்பை உள்ளது. ஆனால் இந்த வருடம் வெல்லப்போவது யார் என்பதை பற்றி நான் எந்த கருத்தையும் கூறவில்லை. மோக்கா மோக்கா அல்லது எதுவாக இருந்தாலும் இறுதியாக என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஏனெனில் கடந்த முறை அதுபற்றி நான் கருத்து தெரிவித்திருந்த போது அனைத்தும் மோசமாக அமைந்தது” என்று கூறினார்.

இதையும் படிங்க : இங்கிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் – வெளியான புதிய செய்தி

வரலாற்றில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவின் பிரம்மாண்டமான மெல்போர்ன் மைதானத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் இந்த வருட டி20 உலக கோப்பையில் மோதுகிறது. அதில் இந்தியாவின் வெற்றிக்காக காத்திருப்பதாக கூறும் ஹர்பஜன் சிங் அதற்கு முன்பாக தேவையற்ற கருத்துக்களை கூற விரும்பவில்லை என்று இம்முறை அடக்கி வாசித்துள்ளார்.

- Advertisement -
Published by