ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி வென்றது. அந்த வெற்றியால் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கேப்டன் என்ற எம்எஸ் தோனியின் சாதனையை ரோகித் சர்மா சமன் செய்தார். ஐபிஎல் தொடரில் தோனிக்கு முன்பாகவே 5 கோப்பைகளை வென்ற அவர் வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்தார்.
அதனால் இந்திய அணியின் கேப்டனாகவும் முன்னேறிய அவர் தற்போது வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார். அதே சமயம் சர்வதேச கிரிக்கெட்டில் 3 விதமான ஐசிசி வெள்ளைப் பந்து கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக தோனி சாதனை படைத்துள்ளார். அதனால் சர்வதேச அளவில் ரோஹித் சர்மாவை விட தோனி சிறந்த கேப்டனாக அறியப்படுகிறார்.
சிறந்த கேப்டன் ரோஹித்:
இந்நிலையில் எம்எஸ் தோனியை விட ரோகித் சர்மா தான் சிறந்த கேப்டன் என்று அவர்களுடைய தலைமையில் விளையாடிய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். குறிப்பாக தோனி யாரிடமும் அதிகம் பேசாமல் அமைதியாலேயே வேலையை வாங்குவார் என்று ஹர்பஜன் தெரிவித்துள்ளார். ஆனால் ரோஹித் சர்மா வீரர்களிடம் சென்று பேசி அவர்களுக்கு தேவையான திட்டங்களையும் ஆதரவையும் வழங்குவார் என்று ஹர்பஜன் கூறியுள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “நான் தோனிக்கு மேல் ரோஹித் சர்மாவை தேர்ந்தெடுப்பேன். ஏனெனில் ரோகித் சர்மா வீரர்களின் கேப்டன். அவர் வீரர்களிடம் சென்று அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்பார். ரோகித் சர்மா தனது அணி வீரர்களுடன் நல்ல தொடர்பில் இருப்பார். தோனியின் ஸ்டைல் வித்தியாசமானது”
ஹர்பஜன் சிங் தேர்வு:
“அவர் யாரிடமும் அதிகம் பேச மாட்டார். தன்னுடைய எண்ணங்களை தனது அமைதியின் வழியாக புரிய வைப்பார். அது தான் மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான அவருடைய வழியாகும். அந்த வகையில் தோனி – ரோஹித் ஆகிய இருவருமே வித்தியாசமான தலைவர்கள். எம்எஸ் தோனி எப்போதும் ஒரு வீரரிடம் சென்று உங்களுக்கு என்ன ஃபீல்டிங் வேண்டும் என்று கேட்க மாட்டார்”
இதையும் படிங்க: கடும் காய்ச்சலிலும் மும்பை அணிக்காக ஷர்துல் தாகூர் செய்த நெகிழ்ச்சியான சம்பவம் – விவரம் இதோ
“அவர் உங்களை தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ள விடுவார்” என்று கூறினார். இந்த நிலையில் தோனி ஐபிஎல் தொடரிலும் கேப்டன்ஷிப் பதவியிலிருந்து வயது காரணமாக விலகியுள்ளார். மறுபுறம் மும்பை அணி ரோகித் சர்மாவிடம் இருந்து கடந்த வருடம் கேப்டன்ஷிப் பொறுப்பை வலுக்கட்டாயமாக பறித்தது குறிப்பிடத்தக்கது.



