ரஞ்சிக் கோப்பை 2024 – 25 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் அக்டோபர் பதினொன்றாம் தேதி நடைபெற்றது. அதில் எலைட் குரூப் டி பிரிவில் இடம் வகிக்கும் தமிழ்நாடு அணி தங்களுடைய முதல் போட்டியில் சௌராஷ்ட்ராவை இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.. அந்த வெற்றிக்கு பேட்டிங்கில் ஜெகதீசன் 100, சாய் சுதர்சன் 82 ரன்கள் குவித்து அசத்தினர்.
அதே போல பந்து வீச்சில் கேப்டன் சாய் கிஷோர் 4, குர்ஜப்நீத் சிங் 6 விக்கெட்டுகளை எடுத்தனர். குறிப்பாக 2வது இன்னிங்ஸில் 164 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் களமிறங்கிய சௌராஷ்ட்ரா அணி கொடுக்கும் என்று பதிலடி எதிர்பார்க்கப்பட்டது. அப்போது அபாரமாக பந்து வீசிய வேகப்பந்து வீச்சாளர் குர்ஜப்நீத் சிங் 14 ஓவரில் 5 மெய்டன் உட்பட 22 ரன்கள் மட்டும் கொடுத்து 6 விக்கெட்டுகள் எடுத்தார்.
விராட் கோலியின் அட்வைஸ்:
அதனால் சௌராஷ்டிராவை 94 ரன்களுக்கு சுருட்டுவதற்கு முக்கிய பங்காற்றிய அவர் தமிழ்நாடு இன்னிங்ஸ் வெற்றி பெற முக்கிய பங்காற்றினார். குறிப்பாக சௌராஷ்டிரா நம்பிக்கை நட்சத்திரம் புஜாராவை அவர் 2வது இன்னிங்ஸில் டக் அவுட்டாக்கி அசத்தினார். இந்நிலையில் சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி தம்முடைய பந்துகளில் தான் வலைப்பயிற்சி செய்ததாக குர்ஜப்நீத் சிங் தெரிவித்துள்ளார்.
அப்போது விராட் கோலி தமக்கு கொடுத்த ஆலோசனை புஜாராவை டக் அவுட்டாக்க உதவியதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “விராட் கோலிக்கு எதிராக பந்து வீசிய பின் அவரைப் பார்த்தேன். அதை பந்தை சிறப்பாக எதிர்கொள்ளாததால் தம் மீதே கோபமாக இருந்த விராட் கோலியை மீண்டும் பார்க்க நான் விரும்பவில்லை”
புஜாரா அவுட் திட்டம்:
“அதன் பின் நேராக டிரைவ் அடித்த அவர் என்னைப் பார்த்து சிரித்தார். இறுதியில் பந்தில் மூமென்ட் இல்லை என்றால் ஆங்கிள் மாற்றி அரௌண்ட் தி விக்கெட் திசையில் வீச வேண்டும் என்று விராட் கோலி என்னிடம் சொன்னார். அவ்வாறு செய்யும் போது பெரிய ஆங்கிள் கிடைக்காவிட்டாலும் லேசாக கிடைக்கும் மூவ்மெண்ட் பேட்ஸ்மேனை தடுமாற வைக்கும் என்று அவர் சொன்னார்”
இதையும் படிங்க: பாபர் அசாமும் விராட் கோலியும் ஒன்னா? அர்த்தமில்லாம பேசாதீங்க.. ஃபகார் ஜாமனுக்கு ப்ராட் ஹோக் பதிலடி
“புஜாரா போன்ற ஜாம்பவான் பேட்ஸ்மேனுக்கு எதிராக நீங்கள் பந்து வீசும் போது துல்லியமாக இருக்க வேண்டும். எனவே அவரை பின்னங்காலில் தள்ள வைத்து பின்னர் முன்னங்காலில் விளையாட வைத்து அசவுகரியத்தை ஏற்படுத்துவதே திட்டம். முதலில் இன்னிங்ஸில் விக்கெட் எடுக்காததால் திட்டத்திலிருந்து நான் விலகிச் செல்ல வாய்ப்புள்ளதாக பயிற்சியாளர் எல் பாலாஜி சொன்னார். எனவே ஸ்டம்பை சுற்றி பந்து வீசுவதே சிறந்த தேர்வாக இருந்தது” என்று கூறினார்.



