ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேசம் அணிகளை நாக் அவுட் செய்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் இந்திய அணியிடம் ஆப்கானிஸ்தான் தோல்வியை சந்தித்தது. ஆனால் இரண்டாவது போட்டியில் வலுவான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் முறையாக வெற்றியைப் பெற்று ஆப்கானிஸ்தான் புதிய சாதனை படைத்தது.
அதே வேகத்தில் வங்கதேசத்துக்கு எதிராகவும் வெறும் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் முதல் முறையாக ஒரு ஐசிசி தொடரின் செமி ஃபைனலுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது. முன்னதாக அந்தப் போட்டியில் அவ்வப்போது மழை வந்து ஆப்கானிஸ்தானை சோதித்தது. குறிப்பாக 12வது ஓவரில் மழை வருவது போல் தெரிந்ததால் எதையாவது செய்து போட்டியை மெதுவாக்குங்கள் என்று ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஜொனதன் ட்ராட் சைகை செய்தார்.
8வது அதிசயம்:
அதை முதல் ஸ்லிப் பகுதியிலிருந்து பார்த்த குல்பதின் நைப் உடனடியாக தம்முடைய தொடையில் தசைப் பிடிப்பு ஏற்பட்டது போல் நடித்து மைதானத்தில் அப்படியே விழுந்தார். அதனால் மருத்துவ குழுவினர் அவரை சோதித்ததால் சில நிமிடங்கள் போட்டி தாமதமாகி மீண்டும் நடைபெற்றது. மேலும் உண்மையாக காயமடைந்துள்ளேன் என்பதை அம்பயர்களிடம் காட்டுவதற்காக அவர் பெவிலியனுக்கு சென்று அமர்ந்து விட்டார்.
ஆனால் கடைசியில் ஆப்கானிஸ்தான் வென்றதும் அவர் தான் முதல் ஆளாக ஓடி வந்து வெறித்தனமாக வெற்றியை கொண்டாடினார். அதனால் வியந்து போன ரசிகர்கள் இவருக்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம் என்று கலாய்த்து வருகின்றனர். அத்துடன் கால்பந்து போல இவருக்கு சிவப்பு அட்டை கொடுத்து வெளியேற்ற வேண்டும் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் ட்விட்டரில் கலாய்த்தார்.
அதே தருணத்தை நேரலையில் வர்ணனையாளராக பார்த்த முன்னாள் நியூசிலாந்து வீரர் இயன் ஸ்மித் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கலாய்த்து பேசியது பின்வருமாறு. “எனக்கு கடந்த 6 மாதங்களாக மூட்டு வலி இருக்கிறது. இந்தப் போட்டி முடிந்ததும் நான் நேரடியாக குல்பதின் நைப் மருத்துவரை பார்க்க போகிறேன். அவருடைய காயத்தை இவ்வளவு விரைவாக குணமாக்கிய மருத்துவர் தான் தற்போது உலகின் 8வது அதிசயம்” என்று கூறினார்.
இதையும் படிங்க: 2011இல் சச்சின் மாதிரி.. அவருக்காக 2024 டி20 உ.ஜோ ஜெயிச்சு கொடுங்க.. இந்திய அணிக்கு சேவாக் கோரிக்கை
இந்நிலையில் சிவப்பு அட்டை கொடுத்து தம்மை வெளியேற்றுமாறு ட்விட்டரில் கலாய்த்த அஸ்வினுக்கு காயத்தின் நிலைமை பற்றி குல்பதின் நைப் பதிலளித்தது பின்வருமாறு. “தசைப்பிடிப்பு காயம் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போது அல்லது சோகமாக இருக்கும் போது சில நேரங்களில் நடக்கும்” என்று சிரித்துக் கொண்டே பதிலளித்துள்ளார். இதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் தங்களுடைய செமி ஃபைனல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.



