ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் அந்த அணியின் நிர்வாகத்துடன் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக அந்த அணியில் இருந்து வெளியேறுவார் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக மினி ஏலத்திற்கு முன்பாக அவரை டிரேடிங்கில் இடமாற்றம் செய்ய பல்வேறு அணிகளும் முனைப்பு காட்டுகின்றன. அதிலும் குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது சஞ்சு சாம்சனை கொண்டு வருவதற்காக பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது.
சி.எஸ்.கே அணியின் டீலை நிராகரித்த குஜராத் டைட்டன்ஸ் :
குறிப்பாக சஞ்சு சாம்சன் சென்னை அணிக்கு வரும் பட்சத்தில் ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரண் ஆகியோரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இருந்தாலும் சென்னை அணியில் இருந்து எந்த இரு வீரர்கள் வெளியேறுவார்கள் என்பது குறித்த உறுதியான தகவல் இன்னும் வெளியாகவில்லை.
எதிர்வரும் நவம்பர் 15-ஆம் தேதிக்குள் சில முக்கிய முடிவுகள் வெளியாகும் என்பதால் இன்னும் சில தினங்களில் சஞ்சு சாம்சனின் டிரேடிங் விடயம் குறித்த உறுதியான தகவல் கிடைக்கும் என்று நம்பலாம். இந்நிலையில் ரவீந்திர ஜடேஜா அப்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இடம் மாறும் பட்சத்தில் சென்னை அணியில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்படும்.
ஏனெனில் ஏற்கனவே ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வேளையில் ரவீந்திர ஜடேஜாவும் வெளியேறினால் சென்னை அணியில் நூர் அகமது மட்டுமே சுழற்பந்து வீச்சாளராக இருப்பார். இந்நிலையில் ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் அந்த இடத்தை நிரப்ப ஒரு முக்கிய வீரர் தேவை என்பதால் குஜராத் டைட்டன்ஸ் அணியிடமிருந்து தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தரை டிரேடிங் முறையில் சிஎஸ்கே அணி கொண்டு வரும் என்று பரவலாகவே பேசப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த சில வாரங்களாக வாஷிங்டன் சுந்தர் சென்னை அணிக்கு டிரேடிங் செய்யப்படுவார் என்று பேசப்பட்ட வேளையில் குஜராத் அணியின் நிர்வாகம் அதனை மறுத்தே கருத்து தெரிவித்திருந்தது. இந்நிலையில் சென்னை அணியின் ஆஃபரை முற்றிலும் மறுத்து வாஷிங்டன் சுந்தரை வெளியேற்ற மாட்டோம் என்ற முடிவுக்கு வந்துவிட்டதாக தற்போது குஜராத் அணியிலிருந்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க : அதை நிரூப்பிச்ச அப்றமும் மகத்தான ஷமியை கழற்றி விட காரணம் இருக்கா? அகர்கரை சாடிய கங்குலி
அந்த வகையில் வெளியான தகவலின் படி : குஜராத் அணி தற்போது மிகச் சிறப்பான கட்டமைப்புடன் இளம் வீரர்களுடன் தயாராகி உள்ளதால் எதிர்கால திட்டங்களை கணக்கில் கொண்டு வாஷிங்டன் சுந்தரை வெளியேற்ற மாட்டோம் என்று கூறிவிட்டதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக தற்போது மூன்று வகையான இந்திய அணியிலும் இடம்பிடித்து விளையாடி வரும் வாஷிங்டன் சுந்தர் மிகச் சிறப்பான ஃபார்மை வெளிப்படுத்தி வருவதால் அவரை நாங்கள் வெளியேற்ற தயாராக இல்லை என திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.



