முதல் சீசன், அனுபவம் இல்லை ஆனாலும் முதல் அணியாக சாதித்து காட்டிய குஜராத் – கோப்பை வெல்லுமா

Hardik Pandya GT
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் கலை கட்டியிருக்கும் நிலையில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த லீக் சுற்று உச்சகட்டத்தை எட்டியுள்ளது. புள்ளி புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிப்பதற்காக அனைத்து அணிகளும் போட்டிபோட்ட நிலையில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணியாக சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ் முதல் 8 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்ததால் முதல் அணியாக அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. அதனால் முதல் 4 இடங்களை பிடிக்க எஞ்சிய 9 அணிகள் போட்டியிட்டு வரும் நிலையில் மே 10-ஆம் தேதி நடைபெற்ற முக்கியமான 57-வது லீக் போட்டியில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்துள்ள குஜராத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

LSG vs GT Preview

- Advertisement -

புனேவில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த போதிலும் 20 ஓவர்களில் 144/4 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் தொடக்க வீரர் ரித்திமான் சஹா 5 (11) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த மேத்யூ வேட் 10 (7) ரன்களிலும் கேப்டன் ஹர்திக் பாண்டியா 11 (13) ரன்களிலும் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தனர்.

குஜராத் மிரட்டல் பவுலிங்:
அதனால் 51/3 என சுமாரான தொடக்கத்தைப் பெற்ற அந்த அணிக்கு மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் மறுபுறம் நங்கூரமாக நின்று 7 பவுண்டரி உட்பட அரைசதம் கடந்த 63* (49) ரன்கள் எடுத்தார். அவருடன் ரன்கள் குவிக்க போராடிய டேவிட் மில்லர் 26 (24) ரன்களில் அவுட்டானாலும் கடைசியில் ராகுல் திவாடியா அதிரடியாக 22* (16) ரன்கள் எடுத்து ஓரளவு காப்பாற்றினார். லக்னோ சார்பில் அதிகபட்சமாக அவேஷ் கான் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 145 என்ற சுலபமான இலக்கை துரத்திய லக்னோ எளிதாக வெற்றி பெறும் என அனைவரும் நினைத்தனர்.

LSG vs GT

ஆனால் முதல் ஓவரிலிருந்தே துல்லியமாக பந்துவீசிய குஜராத் அந்த அணியின் கேப்டன் கேஎல் ராகுல் 8 (16) குயின்டன் டி காக் 11 (10) க்ருனால் பாண்டியா 5 (5) என முக்கிய வீரர்களை ஆரம்பத்திலேயே அவுட் செய்து மிரட்டியது. அதனால் 33/3 என்று தடுமாறிய அந்த அணியை காப்பாற்ற வேண்டிய ஆயுஷ் படோனி 8 (11) மார்கஸ் ஸ்டோனிஸ் 2 (2) ஜேசன் ஹோல்டர் 1 (2) என முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். இதில் தோல்வியை தவிர்க்க போராடிய தீபக் ஹூடாவும் 27 (26) ரன்களில் அவுட்டானதால் 13.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த லக்னோ வெறும் 82 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

முதல் டீம்:
குஜராத் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ரசித் கான் 4 விக்கெட்டுகளை எடுத்தார். இதனால் 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற குஜராத் இதுவரை பங்கேற்ற 12 போட்டிகளில் 9 வெற்றியையும் 3 தோல்வியையும் பதிவு செய்து புள்ளி பட்டியலில் 18 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. அதைவிட இந்த தொடர் வெற்றிகளால் ஐபிஎல் 2022 தொடரின் பிளே-ஆப் சுற்றுக்கு முதல் அணியாக குஜராத் அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுள்ளது.

இந்த வருடம் புதிதாக 5000+ கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் பெரிய அளவில் நட்சத்திர வீரர்களை வாங்காமல் 5 – 6 நட்சத்திர வீரர்களை மட்டுமே வாங்கியதுடன் பெரும்பாலும் அனுபவம் இல்லாத இளம் வீரர்களை வாங்கியது. அதைவிட இதற்கு முன் உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் அனுபவமில்லாத நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை நம்பி 15 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கிய அந்த அணி நிர்வாகம் நேரடியாக கேப்டனாகவும் அறிவித்தது. அதன் காரணமாக ஆரம்பத்தில் இந்த அணி எங்கே வெல்லப் போகிறது என பெரும்பாலானவர்கள் கணித்தனர்.

சாதித்த குஜராத்:
ஆனால் முதல் போட்டியிலிருந்தே சொல்லி அடித்த அந்த அணி தொடர்ச்சியான வெற்றிகளால் முதல் வாரத்தில் இருந்தே புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து வந்தது. அந்த அணியின் பேட்டிங்கில் சுப்மன் கில் தவிர டாப் ஆர்டர் இதுவரை சரியாக அமையவில்லை என்றாலும் இதற்கு முன்பு இந்தியாவுக்காக மும்பைக்காகவும் மிடில் ஆர்டரில் விளையாடிய ஹர்திக் பாண்டியா கேப்டனாக பொறுப்பேற்றதும் பேட்டிங் சரியும் போதெல்லாம் 3-வது இடத்தில் களமிறங்கி தாங்கிப் பிடித்தார். இருப்பினும் யாருமே எதிர்பாராத வகையில் டேவிட் மில்லர் – ராகுல் திவாடியா ஆகியோர் எதிர்பாராத ஒருசில வெற்றிகளை பெற்றுக்கொடுத்து அந்த அணியின் மிடில் ஆர்டரை வலுப்படுத்தியுள்ளனர்.

gt

அத்துடன் பந்துவீச்சில் முகமது சமி, ரஷீத் கான் ஆகியோருடன் தேவையானபோது ஹர்திக் பாண்டியாவும் பந்துவீசி பலத்தை சேர்க்கிறார். மொத்தத்தில் அனுபவமில்லாத கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையில் கச்சிதமாக செயல்பட்ட அந்த அணி முதல் சீசனில் அதுவும் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று சாதித்துக் காட்டியுள்ளது. தற்போதைய நிலைமையில் கோப்பையை வெல்லும் அளவுக்கு தரம் உயர்ந்துள்ள அந்த அணி எஞ்சிய போட்டிகளிலும் அதே செயல்பாட்டை வெளிப்படுத்தி முதல் சீனிலேயே கோப்பையை வென்று சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement