
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 2023 ஐபிஎல் தொடர் மார்ச் 31ஆம் தேதி அகமதாபாத் நகரில் கோலாகலமாக துவங்குகிறது. வரலாற்றில் 16வது முறையாக நடைபெறும் இத்தொடரில் கோப்பை வெல்வதற்காக 74 போட்டிகளில் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியை முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது. கடந்த வருடம் முதல் முறையாக தோற்றுவிக்கப்பட்டாலும் ஹர்திக் பாண்டியா தலைமையில் கச்சிதமாக செயல்பட்ட அந்த அணி முதல் சீசனிலேயே கோப்பையை வென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
தற்போது ஹர்டிக் பாண்டியா, சுப்மன் கில், ரசித் கான், டேவிட் மில்லர் உட்பட அந்த அணியின் முக்கிய வீரர்கள் நல்ல ஃபார்மில் இருப்பதால் இந்த வருடமும் மிகச் சிறப்பாக செயல்பட்டு சென்னை (2010, 2011), மும்பை (2019, 2020) ஆகிய அணிகளுக்குப் பின் கோப்பையை தக்க வைக்கும் 3வது அணியாக சாதனை படைக்க குஜராத் தயாராகியுள்ளது. மறுபுறம் கோப்பையை தக்க வைத்த முதல் அணியாக 10 வருடங்களுக்கு முன்பே சாதனை படைத்த சென்னை கடந்த வருடம் சுமாராக செயல்பட்டு புள்ளி பட்டியலில் 9வது இடத்தை பிடித்து லீக் சுற்றுடன் வெளியேறியது.
கொட்டிய மழை:
இருப்பினும் இம்முறை ரவீந்திர ஜடேஜா ஃபார்முக்கு திரும்பியுள்ள நிலையில் பென் ஸ்டோக்ஸ் இருக்கும் பலத்துடன் ருதுராஜ் கைக்வாட், டேவோன் கான்வே, மொய்ன் அலி, தீபக் சஹர் போன்ற அனைத்து வீரர்களும் தோனி தலைமையில் ஒன்றிணைந்து சென்னைக்கு 5வது கோப்பையை வெல்ல தயாராகியுள்ளனர். அப்படி நடப்பு சாம்பியன் மற்றும் முன்னாள் சாம்பியன் மோதும் இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு குஜராத் நகரில் இருக்கும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த துவக்க போட்டி பாலிவுட் நட்சத்திரங்களின் நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் 100000+ ரசிகர்களுக்கு முன்னிலையில் கோலாகலமாக நடைபெற உள்ளது.
ஆனால் நேற்று இரவு 8 மணியளவில் திடீரென அகமதாபாத் மைதானத்தை சுற்றிய பகுதிகளில் மழை கொட்டி தீர்த்ததால் ரசிகர்கள் கலக்கமடைந்தனர். இருப்பினும் 9 மணிக்கே ஒதுங்கிய மழை இன்று போட்டியை கெடுக்கும் அளவுக்கு வராது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் போட்டி நாளன்று அகமதாபாத் நகரில் 10% மட்டுமே மழைக்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கும் இந்திய வானிலை மையம் இரவு 7 – 10 மணி வாக்கில் லேசான மேகமூட்டத்துடன் நல்ல வானிலை நிலவும் என்று அறிவித்துள்ளது. எனவே இந்த போட்டி முழுமையாக நடைபெறும் என்று உறுதியாக நம்பலாம்.
பிட்ச் ரிப்போர்ட்:
அகமதாபாத் மைதானத்தில் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் கருமண்ணில் உருவாக்கப்பட்ட பிட்ச் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வகையான பிட்ச் எப்போதும் பேட்டிங்கு சாதகமாக இருக்கும் என்பதால் பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி பேட்ஸ்மேன்கள் அதிரடியாக நல்ல ரன்களை குவிக்கலாம். அதே சமயம் இந்த மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் ஸ்பின்னர்களுக்கும் சமமாக கை கொடுத்து வருகிறது.
குறிப்பாக கடந்த சீசனில் இங்கு நடைபெற்ற 2 போட்டிகளில் வீழ்த்தப்பட்ட 23 விக்கெட்டுகளில் 16 வேகபந்து வீச்சாளர்கள் சாய்த்தனர். எனவே புதிய பந்தில் அவர்களும் மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களும் தாக்கத்தை ஏற்படுத்தி விக்கெட்டுகளை எடுப்பார்கள். 2022 ஐபிஎல் தொடரில் நடைபெற்ற 2 போட்டிகள் அடிப்படையில் இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 144 ஆகும். 2வது இன்னிங்ஸ் ஸ்கோர் 147 ஆகும்.
இதையும் படிங்க:IPL 2023 : இந்த சீசனில் தல எம்எஸ் தோனி படைக்க வாய்ப்புள்ள 3 சிறப்பான சாதனைகளின் பட்டியல்
அதாவது இந்த மைதானத்தில் சேசிங் செய்வது எளிதாக இருந்து வருகிறது. அதன் காரணமாகவே இங்கு இதற்கு முன் நடைபெற்ற 2 ஐபிஎல் போட்டிகளிலும் சேசிங் செய்த அணிகள் வென்றுள்ளன. அத்துடன் இம்முறை இரவு நேரத்தில் நடைபெறும் இந்த போட்டியில் பனியின் தாக்கத்தை இருக்கலாம். எனவே அதை கருத்தில் கொண்டு டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்து வீச தீர்மானித்து சிறப்பாக செயல்பட்டால் வெற்றி உறுதியாகலாம்.