ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 30-ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற 43-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ப்ராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர் மற்றும் கேப்டன் டு பிளேஸிஸ் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அதனால் 11/1 என சரிந்த அந்த அணியை அடுத்து களமிறங்கிய இளம் வீரர் ரஜத் படிடார் உடன் ஜோடி சேர்ந்த மற்றொரு நட்சத்திர தொடக்க வீரர் விராட் கோலி பொறுப்புடன் மீட்டெடுக்க ரன்களை குவித்தார்.

ஏற்கனவே அடுத்தடுத்த கோல்டன் டக் அவுட்டாகி படு மோசமான பார்மில் திண்டாடி வரும் அவர் இந்த போட்டியில் நிதானமாக பேட்டிங் செய்து 2வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தனது அணியை நல்ல நிலைக்கு கொண்டு வந்தார். மொத்தம் 6 பவுண்டரி 1 சிக்சர் உட்பட 58 (53) ரன்கள் எடுத்த அவர் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் முதல் அரை சதத்தை பதிவு செய்து நிம்மதி பெருமூச்சு விட்டு ஆட்டமிழந்தார்.
பெங்களூரு 170:
அவருடன் அதிரடியாக பேட்டிங் செய்து கொண்டிருந்த இளம் வீரர் ரஜத் படிடார் 5 பவுண்டரி 2 சிக்சருடன் 52 (32) ரன்கள் எடுக்க அடுத்து வந்த கிளன் மேக்ஸ்வெல் அதிரடியாக 3 பவுண்டரி 2 சிக்சருடன் 33 (18) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் அதிரடியாக பினிஷிங் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக் 2 (3) ரன்களில் அவுட்டாக இறுதியில் மஹிபால் லோம்ரர் 16 (8) எடுத்ததால் 20 ஓவர்களில் 6 விக்கெட் வீழ்ந்த பெங்களூரு 170 ரன்கள் எடுத்தது. குஜராத் சார்பில் அதிகபட்சமாக பந்துவீச்சில் பிரதீப் சங்வான் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதை தொடர்ந்து 171 என்ற நல்ல இலக்கை துரத்திய குஜராத்துக்கு ரித்திமான் சாஹா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். அப்போது ரித்திமான் சஃகா 4 பவுண்டரி உட்பட 29 (22) ரன்களில் அவுட்டாகி செல்ல அடுத்த ஓவரிலேயே சுப்மன் கில் 31 (28) ரன்களில் நடையை கட்டினார். அந்த சரிவின் போது களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா 3 (5) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்த நேரத்தில் அடுத்த ஒருசில ஓவர்களில் தமிழக இளம் வீரர் சாய் சுதர்சன் 2 பவுண்டரியுடன் அதிரடியாக 20 (14) ரன்களில் ஆட்டமிழந்ததால் குஜராத்துக்கு பின்னடைவு ஏற்பட்டது.
மிரட்டல் ஜோடி:
அந்த நேரத்தில் களமிறங்கிய குஜராத்தின் நம்பிக்கை நட்சத்திர பினிஷெர்களான டேவிட் மில்லர் மற்றும் ராகுல் திவாடியா தேவையான ரன்களை அதிரடியாக குவிக்க தொடங்கினார். குறிப்பாக வெற்றிக்கு கடைசி 30 பந்துகளில் 58 ரன்கள் தேவைப்பட்ட போது பெங்களூரு பவுலர்களை வெளுத்து வாங்கி பார்ட்னர்ஷிப் போட்டு பவுண்டரிகளை பறக்க விட்ட இந்த ஜோடி குஜராத்தை வெற்றி பாதைக்கு அழைத்து வந்தது.

கடைசி நேரத்தில் குறைவான பந்துகளுக்கேற்ப அதிரடியாக பவுண்டரிகளை பறக்க விட்ட இந்த ஜோடியில் டேவிட் மில்லர் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 39* (24) ரன்களும் ராகுல் திவாடியா 5 பவுண்டரி 2 சிக்சருடன் 43* (25) ரன்களும் எடுத்து மிரட்டலான பினிஷிங் கொடுத்ததால் 19.3 ஓவர்களிலேயே 174/4 ரன்களை எடுத்த குஜராத் 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இந்த அதிரடியான வெற்றியால் பங்கேற்ற 9 போட்டிகளில் 8-வது வெற்றியை பதிவு செய்த குஜராத் 16 புள்ளிகளுடன் தொடர்ந்து புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து வெற்றி நடை போட்டு வருகிறது.
மிரட்டும் மிடில் ஆர்டர்:
இந்த வருடம் குஜராத்தின் பேட்டிங்கில் சுப்மன் கில் தவிர ஏனைய வீரர்கள் ஜொலிக்க தவறிய தருணங்களில் கேப்டன் ஹர்திக் பாண்டியாதான் அந்த சரிவை அனைத்தையும் சரி செய்து வெற்றியின் முக்கிய பங்காற்றி வந்தார். ஆனால் இன்றைய போட்டியில் அவர் 3 ரன்களும் சுப்மன் கில் போன்ற டாப் ஆர்டர் வீரர்கள் பெரிய அளவில் ரன்கள் எடுக்க தவறிய போதிலும் ராகுல் திவாடியா – டேவிட் மில்லர் ஆகியோர் தேவையான ரன்களை அதுவும் அதிரடியாக வெற்றிபெற வைத்தனர். இந்த போட்டி மட்டுமல்லாது கடந்த சில போட்டிகளாவே டேவிட் மில்லர், ராகுல் திவாடியா, ரசித் கான் ஆகியோரால் எதிர்பாராத வெற்றியைக் கூட சாத்தியமாக்கும் குஜராத்தின் மிடில் ஆர்டர் மற்றும் பினிஷிங் துறை இதர ஐபிஎல் அணிகளை காட்டிலும் வலுவானதாக உருவாகியுள்ளது.

மறுபுறம் பேட்டிங்கில் ஓரளவு சிறப்பாக செயல்பட்டு 170 என்ற நல்ல ரன்களை எடுத்த போதிலும் பந்துவீச்சில் வணிந்து ஹசரங்கா மற்றும் சபாஸ் அகமது ஆகியோர் மட்டும் தலா 2 விக்கெட்டுகளை எடுத்து வெற்றிக்காக போராடினார். ஏனைய பவுலர்கள் விக்கெட்டுகளை எடுக்காமல் ரன்களை வாரி வழங்கியதால் வெற்றிநடை போட்டு வந்த பெங்களூரு பங்கேற்ற 10 போட்டிகளில் 5-வது தோல்வியுடன் 5-வது இடத்திற்கு பின்தங்கியது.



