ஐபிஎல் 2022 தொடர் வரும் மார்ச் 26ஆம் தேதி முதல் கோலாகலமாக துவங்கி மே 29ஆம் தேதி வரை 65 நாட்கள் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகி வருகிறது. இம்முறை லக்னோ மற்றும் குஜராத் ஆகிய 2 புதிய அணிகளுடன் சேர்த்து 10 அணிகள் பங்குபெறும் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் இந்தியாவின் மும்பை, புனே மற்றும் அகமதாபாத் ஆகிய 3 முக்கிய நகரங்களில் மட்டும் நடைபெற உள்ளது. இதில் மார்ச் 26 – மே 22 வரை நடைபெற உள்ள 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றுக்கான முழு அட்டவணை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அட்டவணையின்படி முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த லீக் சுற்றுப் போட்டிகள் அனைத்தும் மும்பையில் உள்ள வான்கடே, டிஒய் பாட்டில், ப்ராபோர்ன் மற்றும் புனேவில் உள்ள எம்சிஏ ஆகிய 4 மைதானங்களில் நடைபெற உள்ளது. பைனல் உள்ளிட்ட ப்ளே ஆப் சுற்றுப் போட்டி அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
திடீரென்று விலகிய ஜேசன் ராய்:
முன்னதாக இந்த ஐபிஎல் தொடருக்காக நடந்த வீரர்கள் ஏலத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த நட்சத்திர அதிரடி தொடக்க வீரர் ஜேசன் ராய் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் தமது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட வேண்டும் என்பதற்காக ஐபிஎல் 2022 தொடரிலிருந்து விலகுகிறேன் என திடீரென கடந்த வாரம் ஜேசன் ராய் அறிவித்தார். ஐபிஎல் துவங்க இன்னும் 20 நாட்கள் கூட இல்லாத நிலையில் அவரின் அந்த திடீர் அறிவிப்பு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

அந்த நிலையில் ஐபிஎல் தொடரில் காலம் காலமாக விளையாடி பல சாதனைகளை படைத்து மிஸ்டர் ஐபிஎல் என பெயரெடுத்த சுரேஷ் ரெய்னாவை குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கப் போவதாக செய்திகள் வெளிவந்தன. கடந்த 2008 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக முதுகெலும்பு வீரராக விளையாடி வந்த அவரை அந்த அணி நிர்வாகம் வாங்காதது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்த நிலையில் இந்த செய்தி பலரையும் மகிழ்ச்சி அடைய வைத்தது. ஆனால் அவரை வாங்குவதற்கான எண்ணம் துளி அளவு கூட இல்லை என அறிவித்த குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் சுரேஷ் ரெய்னா பற்றிய செய்திகள் அனைத்தும் வெறும் வதந்தி என முற்றுப்புள்ளி வைத்தது.
ரஹமதுல்லா குர்பாஸ்:
இருப்பினும் ஜேசன் ராய் இடத்தில் ஒரு நல்ல அதிரடி தொடக்க வீரர் இல்லாத காரணத்தால் யாரையாவது ஒருவரை வாங்கியே தீரவேண்டும் என்ற இக்கட்டான நிலைக்கு அந்த அணிக்கு ஏற்பட்டது. ஏனெனில் அந்த அணியில் மற்றொரு தொடக்க வீரராக விளையாடக்கூடிய தகுதியுடன் தென்படும் ரித்திமான் சஹா 37 வயதை கடந்து விட்டதுடன் ஜேசன் ராய் அளவுக்கு அதிரடியாக விளையாட மாட்டார் என அனைவருக்கும் தெரியும். மேலும் மிடில் ஆர்டரில் விக்கெட் கீப்பராக விளையாட வாங்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட் தொடக்க வீரராக களமிறங்கினால் மிடில் ஆர்டர் பலவீனமாகி விடும்.

இப்படிப்பட்ட நிலையில் ஜேசன் ராய்க்கு பதிலாக ஆப்கானிஸ்தானை சேர்ந்த இளம் அதிரடி தொடக்க வீரர் ரஹமதுல்லா குர்பாஸ் ஒப்பந்தமாகியுள்ளார் என பிரபல கிரிக்பஸ் இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இவர் கடந்த சில வருடங்களாகவே அந்த அணிக்கு நல்ல தொடக்க வீரராக செயல்பட்டு வருகிறார். மேலும் ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் பயிற்சியாளராக இருந்த தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த லன்ஸ் குளூஸ்னர் தான் இப்போதைய குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாடிய ரஹமதுல்லா குர்பாஸ் திறமையை நன்கு தெரிந்த காரணத்தினாலேயே லன்ஸ் க்ளுஸ்னர் பரிந்துரையின் பேரில் தற்போது குஜராத் அணிக்காக அவர் ஒப்பந்தமாகியுள்ளார் என தெரியவருகிறது.
செயல்பாடு எப்படி:
ஜேசன் ராய் அளவுக்கு அனுபவம் இல்லை என்றாலும் தற்போது 20 வயது மட்டுமே நிரம்பியுள்ள அவர் இதுவரை ஆப்கானிஸ்தானுக்காக 20 போட்டிகளில் விளையாடி 534 ரன்களை 137.68 என்ற நல்ல ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் எடுத்துள்ளார். சமீபத்தில் பாகிஸ்தானில் நடந்த பிஎஸ்எல் டி20 தொடரில் கூட இஸ்லாமாபாத் அணிக்காக 5 போட்டிகளில் விளையாடிய அவர் 139 ரன்களை 180.51 என்ற மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் விளாசினார்.

இப்படி ஒரு நல்ல வளர்ந்து வரும் வீரராக தோன்றும் இவர் விக்கெட் கீப்பிங் செய்யும் திறமையும் பெற்றுள்ளதால் தங்கள் அணிக்கு நிச்சயம் உதவுவார் என்ற அடிப்படையில் குஜராத் டைட்டன்ஸ் இவரை வாங்கியுள்ளது. மேலும் தற்போது பாகிஸ்தானில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி வரும் மேத்தியூ வேட் ஐபிஎல் தொடங்கி 10 நாட்கள் கழித்து தான் குஜராத் அணியுடன் இணைய உள்ளார். எனவே அந்த நேரத்தில் இவர் குஜராத் அணியின் விக்கெட் கீப்பராக இவர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.



